இன்று ஜனாதிபதியைச் சந்திக்கிறார் வடக்கு முதல்வர்
வடமாகாண காணி விவகாரம் தொடர்பிலும் மக்களின் மீள்குடியேற்றம் குறித்தும் ஆராய்வதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று வியாழக்கிழமை விசேட கூட்டம் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரனும் பங்கேற்கவுள்ளார்.
மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன், காணி அமைச்சர் ஜோன் அமரதுங்க, சிறுவர் விவகார அமைச்சரும் யாழ்.மாவட்ட எம்.பி.யுமான விஜயகலா மகேஸ்வரன் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளனர்.
ஜனாதிபதி தலைமையில் கடந்த 18ஆம் திகதி வடமாகாண காணி பிரச்சினைகள் கூட்டம் நடைபெற்றிருந்தது.இந்தக் கூட்டத்தில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுகயீனம் காரணமாக கலந்துகொள்ளவில்லை.மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் காணிகளை மீள வழங்கும் விடயம் குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆராயப்பட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பில் அறிக்கை ஒன்றினையும் ஜனாதிபதி கோரியிருந்தார்.
இந்தக் கூட்டத்தில் வடக்கில் 108 இடங்களில் தமக்கு காணி தேவைப்படுவதாக படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த விடயங்கள் தொடர்பிலும் இன்றைய கூட்டத்தில் ஆராயப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.