Breaking News

ஐ.நா. பிரதிநிதிகள் இரண்டு பேர் இன்று இலங்கை வருகை

ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரதிநிதிகள் இரண்டு பேர் அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் இன்று இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் நீதித்துறை சுதந்திரம் தொடர்பான விசேட பிரதிநிதி மொனிகா பின்டோ மற்றும் சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான செயற்திட்டத்தின் விசேட பிரதிநிதி ஹுவான் ஈ மெந்தெஸ் ஆகியோரே இன்று இலங்கை வரவுள்ளதாக கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகம் அறிவித்துள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையில் எதிர்வரும் மே மாதம் ஏழாம் திகதி வரை தங்கியிருக்கவுள்ளனர்.

அக்காலப்பகுதியில் அரசாங்க மற்றும் எதிர்க்கட்சி முக்கியஸ்தர்கள், அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், நீதிபதிகள், சட்டமா அதிபர், சட்டத்தரணிகள் , சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள், மனித உரிமை ஆணையாளர் அலுவலக பிரதிநிதிகள், யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் உறவினர்கள் ஆகியோரை சந்தித்து உரையாடவுள்ளனர்.

அத்துடன் வடக்கு, கிழக்கு, தெற்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் இவர்கள் கண்காணிப்பு விஜயங்களையும் மேற்கொள்ளவுள்ளனர்.

சித்திரவதைகளிலிருந்து பாதுகாப்புப் பெறுவது தொடர்பான செயற்திட்டத்தின் விசேட பிரதிநிதி ஹுவான் ஈ மெந்தெஸ் கடந்த 2010ம் ஆண்டிலும் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். திருமதி பின்டோ இலங்கைக்கு விஜயம் செய்வது இதுவே முதற்தடவையாகும்.