Breaking News

மே தினத்தினை அரசியல் இலாபத்தினை அடையும் எண்ணத்துடன் கொண்டாடாதீர்கள்!

குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல் இலங்கையில் உள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


சர்வதேச மே தினம் தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சர்வதேச தொழிலாளர் தினமானது தொழிலாளர்களினது கௌரவத்தையும் அவர்களது சாதனைகளையும் கொண்டாடும் தினமாக மட்டுமல்லாது, தொழிலாளர்கள் தங்களது உரிமைகளை வென்றெடுப்பதற்காக அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களையும் நினைவு கூரும் ஒரு தினமாகும்.

இந்நாளில் எமது நாட்டின் வளர்ச்சிக்காகவும் நலன்களுக்காகவும் அயராது உழைக்கும் நமது நாட்டின் தொழிலாளர் சமூகத்திற்கு எனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன்.

இந்த முக்கியமான நாளில், நாட்டை அபிவிருத்தி செய்யும் தங்களது பணிகளிலே ஒற்றுமையாக செயற்படுமாறு அழைப்பு விடுப்பதோடு. சமூககங்கள் மத்தியில் தேசிய ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் தங்களுக்கு இருக்கும் பொறுப்பினை உணர்ந்தவர்களாக பணியாற்றுமாறு வேண்டுகோள் விடுக்க விரும்புகிறேன்.

இத்தருணத்தில் தொழிலாளர் சமூகத்தின் கௌரவத்தையும் சுயமரியாதையையும் பாதுகாக்க சகல நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதோடு, அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்ய தேவையான கருமங்களை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்த விரும்புகிறேன்.

இறுதியாக தமது குறுகிய அரசியல் இலாபத்தை அடையும் எண்ணத்துடன் மே தினத்தை கொண்டாடாமல் இலங்கையில் உள்ள உழைக்கும் சமூகத்தின் சாதனைகளை மதிப்பதன் மூலம் அவர்களது முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு மே தினத்தை அனுஷ்டிக்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளையும் மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன் என்றுள்ளது.