Breaking News

இன்னமும் நிறைவேற்றப்படாத இலங்கையின் கடப்பாடுகள் உள்ளன – சமந்தா பவர்

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குதல், மற்றும் நிலையான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் ஆகிய விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் உள்ளன என்று தெரிவித்துள்ளார் ஐ.நாவுக்கான அமெரிக்காவின் நிரந்தர தூதுவர் சமந்தா பவர்.

வொசிங்டனில் நேற்று முன்தினம் இடம்பெற்ற 12ஆவது இலங்கை – அமெரிக்கா வர்த்தக முதலீட்டு உடன்படிக்கை மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா முக்கியமான இடத்தை வழங்கியிருக்கிறார். இலங்கையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்கு உதவுவதற்கு அமெரிக்கா அர்ப்பணிப்புடன் இருக்கிறது.

2015 ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட மாற்றம் தொடர்பில் நாம் அனைவரும் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அது இலங்கை மக்கள் தமது வாக்குப்பலத்தை பயன்படுத்திய சந்தர்ப்பமாகும்.நிரந்தரமான சமாதானம், ஜனநாயகத்திற்கான பொறுப்புக்கூறல் அனைத்துலக நாடுகளுடனான புதிய உறவு, அனைவருக்கும் சந்தர்ப்பம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்காக இலங்கையின் புதிய தலைமை அர்ப்பணிப்புடன் இருக்கிறது.

கடந்த 16 மாத கால ஆட்சியில் ஜனாதிபதி சிறிசேனவின் நிர்வாகம் பல்வேறு முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழலில் மாற்றம் ஏற்படுத்தியுள்ளது.நான் கடந்த நவம்பர் மாதம் இலங்கைக்கு பயணம் செய்த போது 2010 ஆம் ஆண்டு இருந்த நிலைமையை விட மாற்றமான சூழல் காணப்பட்டது. தாம் மீண்டும் சுவாசிப்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அச்சம் நீங்கியுள்ளதாகவும், மக்கள் எமக்குத் தெரிவித்தனர்.

செயற்பாட்டாளர்கள் தாம் பாதுகாப்பை உணர்வதாகவும், திறந்த முறையில் அரசாங்கத்தை விமர்சிப்பதற்கான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக அறிக்கையிடுகின்றனர்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர். பொதுமக்களின் காணிகள் மீள வழங்கப்படுகின்றன. உள்ளக இடப்பெயர்வுகளுக்கு உள்ளானவர்கள் மீள்குடியேற்றப்பட்டு வருகின்றனர். இலங்கை அனைத்து மக்களுக்கும் சேவையாற்றும் வகையில்இலங்கையின் புதிய அரசாங்கம் நீதி மற்றும் நல்லிணக்கத்திற்காக முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றது.

போரினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்களுக்கு நான் சென்றிந்தேன். மோதல்கள், வேறுபட்டதாக இருக்கலாம். ஆனால் மோதல்கள் ஆழமான வடுக்களை விட்டுச்செல்கின்றன. இலங்கையிலும் அதே நிலைமைதான்.

ஆனால் மிகவும் விரைவாக முயற்சிகளை முன்னெடுத்ததில் இலங்கையைப் போன்ற ஒரு நாட்டை நான் காணவில்லை. அவ்வாறான முயற்சிகளை ஒரு நாடு எடுக்கும்போது அமெரிக்கா, உங்களுடன் இருக்கும் என்றும் உதவிகளை வழங்கும் என்றும் உறுதி கூறுகிறோம் 2015 ஆம் ஆண்டிலிருந்து இலங்கை மனித உரிமையிலும் ஜனநாயகப் பொறுப்புக்கூறலிலும் உலக வெற்றியாளராக (சம்பியனான) மாறியுள்ளது.

ஒரு காலத்தில் பத்திரிகைகளைத் திறந்து பார்த்தவுடன் உலக நாடுகளின் தலைவர்கள் தமது அரசியலமைப்பை மாற்றுவதற்கு முயற்சிப்பதை அறிந்து கொள்ளலாம். அவர்களின் அதிகாரங்களை அதிகரிப்பதற்கு முயற்சிப்பதை காணலாம்.

ஆனால் இலங்கையில் ஜனாதிபதி சிறிசேனவின் அரசாங்கம் அதிகாரங்களை குறைக்கவும், பதவிவகிக்கும் தவணைகளைக் குறைக்கவும் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டு வந்ததை நீங்கள் காணலாம்.

ஆனால் இலங்கையில் இன்னும் அதிகமான விடயங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி மற்றும் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஊக்குவித்தல், ஆட்சியை சிறந்த முறையில் முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளன.

இந்த விடயங்களில் காணப்படுகின்ற சவால்கள் குறித்து நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு அமெரிக்கா தொடர்ந்தும் உதவிகளை வழங்கும்.

இலங்கை அமைதியான நாடாகவும், ஜனநாயகம் மிக்கதாகவும், அனைத்துப் குடிமக்களும் தமது வாழ்க்கையை சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கான சூழலையும் உருவாக்கும் நாடாகவும் அமைய வேண்டுமென்பதே அனைவரது விருப்பமாகும்.” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக,இலங்கையின் அனைத்துலக வர்த்தக மற்றும், அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரமவும் வொசிங்டன் சென்றி்ருந்தார்.

இந்த மாநாட்டின் முடிவில், செயற்திட்ட உடன்பாடு ஒன்றும், அமெரிக்காவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.