Breaking News

மஹிந்தவை சந்தித்தமை மகிழ்ச்சியளிக்கின்றது – உதயங்க

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை தாய்லாந்தில் வைத்து சந்திக்க கிடைத்த சந்தர்ப்பம் மகிழ்ச்சி அளிப்பதாக ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற குறித்த சந்திப்பு தொடர்பில் ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அரசியல் காரணங்களுக்காக அரசாங்கம் தம்மீது சுமத்தும் குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானது எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்சமயம், யுக்ரேனின் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் கற்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் தமக்கு எதிராக அரசாங்கம் எந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தாலும், யுக்ரேன் அரசாங்கம் அதனை ஏற்றுக்கொள்வதில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நொயல் ரணவீர என்பவரின் மரணம் தொடர்பில் ரஷ்ய நாட்டு சாரதி ஒருவருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நிறைவடைந்துள்ளதாகவும், அதன் 34 பக்கங்கள் அடங்கிய அறிக்கையை ரஷ்ய அரசாங்கம் வெளிவிவகார அமைச்சிற்கு கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், தோண்டப்பட்ட நொயல் ரணவீரவின் உடல் கடந்த மார்ச் மாதம் 25ஆம் திகதி ரகசியமாக மீண்டும் புதைக்கப்பட்டதாக உதயங்க வீரதுங்க வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.