Breaking News

காங்கேசன்துறை சிமெந்து தொழிற்சாலை விரைவில் மீள இயங்கவுள்ளது


வடக்கு மாகாண அரசு விதித்த நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டு காங்கேசன்துறை சிமெந்துத் தொழிற்சாலையை மீள ஆரம்பிப்பிப்பதற்கு கொழும்பு வாணிப அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

அமைச்சர் றிசாத் பதியுதீன் நேற்றுக் காலை குறித்த தொழிற்சாலை அமைந்துள்ள பிரதேசத்துக்குச் சென்று பார்வையிட்டார். சுமார் 687 ஏக்கர் விஸ்தீரணம் கொண்ட குறித்த தொழிற்சாலையின் கட்டிடங்கள் மற்றும் இயந்திரங்கள், இடிபாடுகளுக்கு மத்தியில் கிடந்ததைக் கண்டு அமைச்சர் பார்வையிட்டார்.

இதன் போது கருத்துத் தெரிவித்த அவர்-

சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்படாமல் மூலப்பொருட்களை கிளிங்கரை இறக்குமதி செய்து அதனூடாகச் சீமெந்து பொது செய்யப்பட்டு விற்பனை செய்யும் வகையில் சீமெந்து தொழிற்சாலை இயங்கவுள்ளது.

சுண்ணாம்புக் கல்லையும் களிமண்ணையும் அதிகூடிய வெப்பநிலையில் உருக்கிப் பெறப்படும் கலவையான கிளிங்கரை காங்கேசன்துறைக்கு இறக்குமதி செய்து அதனுடன் ஜிப்சத்தைக் கலந்து சீமெந்தாக உருவாக்கிப் பொதி செய்யும் நடவடிக்கையே காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையில் மேற்கொள்ளப்படவுள்ளது.

இத் தொழிற்சாலை எப்போது ஆரம்பிக்கப்படும் என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய போது-அது இன்றே (நேற்று) ஆரம்பிக்கப்பட்டுவிட்டது. இத் தொழிற்சலைக்கான ஆலோசனை நிபுணர்கள் இருவரை (முன்னாள் அதிகாரிகள்) நியமித்துள்ளேன் என்றார்.

யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், சீமெந்துக் கூட்டுத்தாபனத் தலைவர் ஹசைன் பைலா, மௌலவி சுபியான், சீமெந்துக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் ரியாஸ் சாலி, மாந்தை உப்புக் கூட்டுத்தாபனத் தலைவர் அமீன் உட்பட அதிகாரிகள் பலர் அமைச்சருடன் விஜயம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.