Breaking News

நிலையான சமாதானத்தை கட்டியெழுப்ப இலங்கை பாடுபட வேண்டும் : சுவீடன் அமைச்சர்

நீண்டகால யுத்தத்திற்கு இலங்கை முகங்கொடுத்து, அதிலிருந்து மீண்டு வந்துள்ள நிலையில், நிலையான சமாதானத்தை கட்டியழுப்புவதற்காக தொடர்ந்தும் பாடுபட வேண்டுமென்றும் பல முன்னேற்றகரமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமெனவும் இலங்கை வந்துள்ள சுவீடன் வெளிவிவகார அமைச்சர் மார்கட் வோல்ஸ்ரோம் தெரிவித்துள்ளார்.

‘வெளியுறவுக் கொள்கையில் பெண்ணியத்தின் பங்கு’ எனும் தலைப்பில் கொழும்பு லக்ஷ்மன் கதிர்காமர் சர்வதேச உறவுகள் மற்றும் மூலோபாய கற்கைகள் நிலையத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர் சிறப்புரையாற்றியபோதே இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்களில் பெண்கள் பாதிக்கப்படுவதை சாதாரண விடயமாக கருதுவது தவறானது. உலகத்தின் பல பாகங்களிலும் பாரிய மோதல்கள் நடைபெறுகின்றன. இதனால், பல்வேறு இழப்புக்கள் ஏற்படுகின்றன. கல்வியின்மை, வறுமை என்பன மோதல்கள் இடம்பெறும் பகுதிகளில் வலுவாக அதிகரிக்கின்றது.

இலங்கை நீண்டகால ஆயுத மோதல்களுக்கு முகங்கொடுத்த நாடென்ற வகையில், பல்வேறு துர்ப்பாக்கியமான அனுபவங்கள் உங்களுக்கு காணப்படலாம். இந்நிலையில், வன்முறைகளற்ற நிலையான சமாதானத்தை கட்டியெழுப்புவதற்கான சர்வதேச சமூகத்தின் உதவிகள் தொடர்ந்தும் வழங்கப்படும். அதேநேரம் நிலையான சமாதானத்தை முறையான வகையில் கட்டியெழுப்புவதற்கான தொடர்ச்சியான, முக்கியமான நடவடிக்கைகளை, இலங்கை அரசாங்கம் இடைவிடாது முன்னெடுக்கவேண்டும்.

மோதல்கள், வன்முறைச் சம்பவங்களின்போது பெண்களின் மனித உரிமைகள் ஆண்களை விடவும் அதிகமாக மறுக்கப்படுகின்றன. சமாதானத்தை மீளக்கட்டியெழுப்பும் செயற்பாட்டில், பெண்கள் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டமை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதில்லை. சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றில் பெண்களுக்கான பங்களிப்பு, சம அளவில் வழங்கப்படவேண்டும். மனித உரிமைகள், சட்டம், ஒழுங்கு ஆகியவற்றில், பெண்களுக்கு உரிய இடம் வழங்கப்பட வேண்டியது அவசியமாகும்.

உள்ளூராட்சி மன்றங்கள், நாடாளுமன்றம், முக்கிய பேச்சுவார்த்தைகள், சமாதான பொறிமுறைகள் போன்ற முக்கிய விடயங்களில், பெண்களின் பிரதிநிதித்துவம் உள்வாங்கப்பட வேண்டும். வெளிநாட்டுக் கொள்கையில் பெண்ணியத்தை உள்வாங்குவதன் ஊடாக உயர்ந்த சமூகத்தை உருவாக்குவதோடு சமாதானம், பாதுகாப்பு மற்றும் அபிவிருத்தியில் சிறந்த நாடொன்றை கட்டியெழுப்ப முடியும்.

போர்க்குற்றம் போன்ற பாரிய விடயங்களில் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் அச்சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்களை தவிர்க்க முடியாதென்ற ரீதியில் பார்ப்பது தவறானது.

பாலியல் ரீதியாக பெண்கள் அதிகமாக பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமைகளிலிருந்து உறுதியான பாதுகாப்பு அளிக்கப்படுவது அவசியமாகின்றது. நிலையான சமாதானம் மற்றும் பாதுகாப்பை, சிறந்த முறையில் கட்டியெழுப்புவதற்கு பால்நிலை சமத்துவம் பேணப்படுகின்றமை மிகவும் முக்கியமானது. பல வருட காலம் நீடித்த யுத்தம், நிறைவுக்கு வந்துள்ள நிலையில், நிலையான சமாதானத்தை கட்டியெழுப்பவதற்கான தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி சாதகமான முயற்சிகளை மேற்கொவது அவசியமாகின்றது” என்றார்.