ஜெயலலிதாவின் பொய்மூட்டைகளை நம்ப மக்கள் தயாராக இல்லை!
பொய்மூட்டைகளை அவிழ்த்து விடும் ஜெயலலிதாவை நம்ப நாட்டு மக்கள் இனியும் தயாராக இல்லை” என கருணாநிதி கூறியுள்ளார்.தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார் .அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
தேர்தல் பிரசாரம் செய்ய ஜெயலலிதா தொடங்கிய நாளிலிருந்து, என்னைப் பற்றி ஏதாவது குறை சொல்லிப் பேசாவிட்டால் அவருக்கு பேசிய மன நிறைவே இருக்காது போலும். ஆனால் நம்மைப் பொறுத்தவரையில் அவர் எழுப்பும் பிரச்சினைகளின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கம் அளிக்க நல்ல வாய்ப்பு கிடைக்கிறது என்ற வகையில் மகிழ்ச்சி தான்.அருப்புக்கோட்டையில் பேசிய ஜெயலலிதா, “கச்சதீவு தாரை வார்க்கப்பட்டதற்கு கருணாநிதி உடந்தை என்பதை நான் அழுத்தம் திருத்தமாகக் குற்றம் சாட்டுகிறேன். அதிமுக ஆட்சி அமைந்தவுடன் உச்ச நீதிமன்றத்தின் மூலம் கச்ச தீவு மீட்கப்பட்டு தமிழக மீனவர்களின் உரிமைகள் நிலைநாட்டப்படும்’’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.
மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்தவுடன் கச்சதீவு மீட்கப்படுமாம்.இது 2016ம் ஆண்டு சுமார் கால் நூற்றாண்டுக்கு முன்பு, ஆம் 25 ஆண்டுகளுக்கு முன்பு, 1991ம் ஆண்டு, 15.-8.-1991 அன்று கோட்டையில் விடுதலை நாளையொட்டி கொடியேற்றி விட்டுப் பேசிய முதலமைச்சர் ஜெயலலிதா, “கச்ச தீவை மீட்டே தீருவேன்” என்று சூளுரைத்தாரே, அதற்குப் பிறகு இவ்வளவு காலமும் என்ன செய்து கொண்டிருந்தார் ?. கச்சதீவை ஏன் மீட்கவில்லை? தேர்தல் என்றதும் கச்சதீவு நினைவுக்கு வருகிறதோ ? இந்தப் பிரச்னையில் நான் துரோகம் செய்து விட்டதாக “அம்மையார்” இதுவரை எத்தனை முறை அறிக்கை விடுத்திருக்கிறார் என்று எண்ணித்தான் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறையும், கச்சதீவினை நானும், மத்திய அரசும் சேர்ந்து கொண்டு தாரை வார்த்து விட்டதாகப் புகார்களை அடுக்க தொடங்கி விடுவார்.
கச்சதீவை தாரை வார்க்க தி.மு.க. எந்தக் காலத்திலும் ஒப்புக் கொள்ளவில்லை; தாரை வார்க்க உடன்படவும் இல்லை என்பதை எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் நான் அறை கூவல் விட்டுச் சொல்லத் தயார். தி.மு.கழகத்தைப் பொறுத்து மாத்திரமல்ல தி.மு.க. ஆட்சியைப் பொறுத்தும் பல நேரங்களில் கச்ச தீவு பிரச்சினையை எழுப்பி, “கச்சதீவை மீட்டுக் கொடுங்கள்” என்று கேட்கத் தவறியதும் இல்லை.
கச்சதீவிலே மீனவர்களுக்கு உள்ள உரிமை பாதிக்கப்படுவதை எடுத்துக்காட்டி, அந்தப் பாதிப்பை நிவர்த்திக்க வேண்டுமென்று கேட்கவும் தி.மு.க. அரசு தவறியதே இல் லை என்றெல்லாம் நான் பல முறை திரும்பத் திரும்ப விளக்கிய பிறகும், மீண்டும் அதே குற்றச்சாட்டுகளை ஜெயலலிதா எழுப்புகிறார் என்றால் என்ன அர்த்தம்? அவரிடம் பேசுவ தற்கு வேறு பொருள்இல்லை என்றுதானே கருத வேண்டியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.








