போராட்டத்தை ஆரம்பிக்க அரசாங்கம் இடமளிக்கக்கூடாது - மாவை கோரிக்கை
மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்க நல்லிணக்க அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. நாட்டில் நல்லிணக்க அரசாங்கம் தொடரவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான சோ.சேனாதிராஜா தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தெல்லிப்பழை பலநோக்கு கூட்டுறவுச் சங்க தலைவரும் நமது ஈழநாடு பத்திரிகையின் நிர்வாக முகாமையாளருமான சி.சிவமகராசாவின் 10 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு சிலை திறப்புவிழாவும் நூல்வெளியீடும் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
நல்லிணக்க அரசாங்கமானது நாட்டில் தொடரவேண்டும் என்றே விரும்புகின்றோம். மாறாக கடந்த ஆட்சி கால-த்தைப் போன்று இன்றும் தொடர இடமளிக்க-க்கூடாது. இன்றைய சூழலில் காணி சுவீகரிப்பு நடைபெறுகின்றது. புனர்வாழ்வு பெற்றவர்கள் மீண்டும் கைதுசெய்யப்படுகின்றார்கள். இவை நிறுத்தப்படவேண்டும். குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடன் விரைவில் பேசவுள்ளோம்.
இந்த ஆட்சி கடந்த ஆட்சிபோல் தொடர இடமளிக்க மாட்டோம். அவ்வாறு தொடருமாயின் நாம் மீண்டும் போராட்டத்திற்குள் அதாவது ஜனநாயக ரீதியாகப் போராடுவோம்.
அரசாங்கம் தற்போதைய நிலைமையை ஆராயவேண்டும். அத்துடன் கிடைத்துள்ள சர்வதேச சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும். ஐ.நா மனித உரிமை பேரவையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை வைத்து தமிழ் மக்களுடைய இனப்பிரச்சினை தீர்வு, இராணுவக் குறைப்பு, சொந்த நிலங்களை மக்களிடம் ஒப்படைத்தல், வாழ்வாதார உரிமைகள் போன்ற விடயங்களில் அக்கறை செலுத்தி நடவடிக்கை எடுக்கவேண்டும்.
மேலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அமரர் சி.சிவமகாராசா கூட்டுறவாளர் மட்டுமன்றி அகிம்சை வாதியுமாவார். அத்துடன் இவர் கூட்டுறவு பணிகளுடன் நின்றுவிடாது பாராளுமன்றத்திற்கும் சென்று நாட்டின் மக்களுக்காக பணியாற்றியவர்.
ஒரு இலக்கோடு, கொள்கையோடு நின்று செயலாற்றியவர். மக்களின் தேவைகளை, உரிமைகளை நிலை நாட்ட பல போராட்டங்களை அவர் முன்னின்று நெறிப்படுத்தியவர். இறக்கும் தறுவாயிலும் மக்களுக்காக சேவையாற்றிய மனிதனை வன்முறையாளர்கள் சுட்டுக்கொன்றனர். இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது. இக்கொலையை செய்தவர்களை சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை வழங்கப்படவேண்டும் எனத் தெரிவித்தார்.








