சிறிதரனின் மெய்ப்பாதுகாவலரிடம் பொலிஸார் விசாரணை
கிளிநொச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் மெய்ப்பாதுகாவலர் ஒருவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண் டுள்ளனர்.
கடந்த வாரம் கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான இரா. சம்மந்தனை பரவிபாஞ்சான் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் முன்னறிவித்தலின்றி இன்றி அழைத்துச் சென்றமை தொடர்பிலே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி இரணைமடு உதவி பொலிஸ் அத்தியட்சர் காரியாலயத்திற்கு அழைக்கப்பட்ட மெய்ப்பாதுகாவலரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதோடு, வாய்மொழி முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை தலைமை அலுவலகம், சமாதான செயலகம், தமிழீழ வைப்பகம், விடுதலைப்புலிகளின் திட்டமிடல் செயலகம், விடுதலைப்புலிகளின் மகளீர் பிரிவு தலைமை அலுவலகம் போன்றன செயற்பட்ட பிரதேசங்கள் இராணுவத்தின் உயர் பாதுகாப்பு வலயங்களாக காணப்படுகின்றன.
குறித்த உயர்பாதுகாப்பு வலயத்தில் மக்களுக்குச் சொந்தமான உறுதி காணிகள் உண்டு. அந்த மக்களில் சிலர் தற்போதும் மாவட்டத்திற்குள் இடம்பெயர்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.