மகிந்த ஆட்சியில் நடந்த கசப்புக்கள் புத்தக வடிவில்
கடந்த மகிந்த ராஜபக்ச ஆட்சியில் தனக்கேற்பட்ட கசப்பான அனுபவங்கள் குறித்து புத்தகம் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாக இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அத்துடன் உள்ளுராட்சித் தர்தலை அடுத்த வருட ஆரம்பத்தில் நடத்த இருப்பதாகவும் அவர் கூறினார்.
” உள்ளூராட்சி மன்றங்களில் தற்போதைய செயற்பாடுகள் மற்றும் சவால்கள் ” என்ற தொனிப்பொருளில் இலங்கை மன்றக் கல்லூரி மண்டபத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டார்.
இக் கருத்தரங்கில் மாகாண சபை ஆளுநர்கள், முதலமைச்சர்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையின் உறுப்பினர்கள், செயலாளர்கள், உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த ஒருநாள் கருத்தரங்கு மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா மற்றும் இராஜாங்க அமைச்சர் பிரியங்க ஜெயரட்ண ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
இந்த கருத்தரங்கின் இறுதியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது கருத்தரங்கில் எடுக்கப்பட்ட தீர்மான அறிக்கையினை ஜனாதிபதியிடம் அமைச்சர் பைஸர் முஸ்தபா கையளித்தார்.
ஜனாதிபதி இங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், இலங்கையில் நிறைவேற்றதிகாரம் இரண்டு பிரிவினருக்கே உள்ளது. ஒன்று ஜனாதிபதிக்கு, மற்றது மேயர்கள், பிரதேச சபை தலைவர்களுக்குதான் இந்த அதிகாரம் உள்ளது. அது அரசியலமைப்பு சட்டங்களிலும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதிக்கு அடுத்ததாக அதிகாரமுள்ள இந்த உள்ளூராட்சி சபையினால் மக்களின் தேவைகள் அறிந்து சேவைகள் செய்ய முடியும். இதனை 13 ஆம் திருத்தமும் வலியுறுத்துகின்றது.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயகா, ரணசிங்க பிரேமதாஸா ஆகியோர் உள்ளூராட்சி சபைளின் உறுப்பினர்களாக இருந்தே நாட்டின் தலைவர்களானார்கள்.
1970 களில் தேர்தல்கள் நடத்தப்பட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்கப்பட்டபோதிலும், அதன்பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படவில்லை. இதனால் மக்களின் விருப்புக்களை அரசாங்கத்தால் அறிந்து கொள்ள முடியாது போனது. எனவே நாட்டில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும். அப்போதுதான் மக்களின் விருப்பு என்ன என்பதை ஆட்சியாளர்களினால் புரிந்து கொள்ள முடியும்.
கடந்த கால ஆட்சியாளர்கள் எல்லை நிர்ணயங்களை நேர்மையாகவும், சரியாகவும் மேற்கொள்ளவில்லை. இதனால் அமைச்சர் பைஸர் முஸ்தபா தலைமையில் குழு அமைத்து இது தொடர்பில் ஆலோசனைகள் பெறப்பட்டு புதிய எல்லை நிர்ணயனங்கள் தொடர்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் நடத்தப்படும்.
தற்போது பெரும்பாலான உள்ளூராட்சி சபைகள் கலைக்கப்பட்டு விசேட ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தத்தமது பிரதேசங்களில் அரசியல்வாதிகள் இல்லாத காரணத்தினால் சேவைகள் நடைபெறுவதில்லையென மக்கள் ஆதங்கம் தெரிவிக்கின்றனர்.
எனவே இவ்வாறான உள்ளூராட்சி சபைகளில் ஆணையாளர்கள், அதிகாரிகள், செயாலளார்கள் தமது திறமையை வெளிப்படுத்தி மக்கள் சேவையை செய்து மக்களின் ஆதரவினை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கடந்த ஆட்சிக் காலத்தில் சில உள்ளூராட்சி சபை, மாகாண சபை உறுப்பினர்கள், தலைவர்கள் ஊழல்மோசடிகள், கொலைகள், கொள்ளைகள் மற்றும் கற்பழிப்புக்களில் ஈடுபட்டனர்.
தென்மாகாணத்தில் கடந்த ஆட்சியின் போது எமது கட்சியை சேர்ந்த உள்ளூராட்சி சபை தலைவரொருவர் வெளிநாட்டுப்பெண்னை கற்பழித்து அவரது கணவரை கொலை செய்தார். இச் சம்பவத்தின்போது சுதந்திரக் கட்சியின் செயலாளர் என்ற ரீதியில் நானும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவும் இத் தலைவரை கட்சியிலிருந்தும், பதவியிலிருந்தும் வெளியேற்றுவதற்கான கடிதத்தை அனுப்பி வைத்தோம்.
ஆனால் அன்றைய கட்சி தலைவர் இந்த கடிதங்களை உடனே வாபஸ் பெறுமாறு எமக்கு உத்தரவிட்டார். இவ்வாறு முன்னைய தலைவர் பல மோசடிக்காரர்களுக்கு உடந்தையாக இருந்தார்.
கடந்த ஆட்சிக் காலத்தில் எனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் தொடர்பில் புத்தகமொன்றை எழுதிக் கொண்டிருக்கின்றேன். அதனை விரைவில் வெளியிடுவேன். இங்கு இன்னொரு சம்பவத்தையும் கூற வேண்டும். கடந்த ஆட்சிக் காலத்தில் நூறு பெண்களை கற்பழித்த பிரதேச சபை உறுப்பினரொருவர் அதனை விழாவாக கொண்டாடினார்.
எனவே பிரதமர் பதவிகிடைக்காததன் காரணமாகவே நான் கட்சியிலிருந்து வெளியேறினேன் எனக்கூறுவதில் உண்மையில்லை. மாறாக கொள்கை முரண்பாடுகள் காரணமாகவே நான் கட்சியிலிருந்து வெளியேறினேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார். இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர், ஆளுநர் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை.