யோசித்தவுக்குச் சொந்தமான சில சொத்துக்கள் விபரம் அம்பலம்!
கறுப்புப் பணம் தொடர்பில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான யோசித ராஜபக்ஷவுக்கு சொந்தமான இன்னும் பல கோடி ரூபா பெறுமதியான சொத்துக்கள் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
தெஹிவளை மிஹிந்து மாவத்தையிலுள்ள 173/2 எனும் முகவரியில் காணப்படும் ஆடம்பரமான நான்கு மாடி வீடொன்று மற்றும் இரு மாடி வீடொன்று என்பன பற்றிய தகவல்களே இவ்வாறு தெரியவந்துள்ளன.
கல்கிஸ்ஸ மஜிஸ்ட்ரேட் நீதிபதியின் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் பின்னர் இந்த சொத்துக்கள் பற்றிய விபரம் தெரியவந்துள்ளது.
இந்த வீட்டுக்கான காணியை கொள்வனவு செய்வதற்கு மாத்திரம் 4 கொடி 90 லட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக இது வரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
அத்துடன், தெஹிவளை கல்கிஸ்ஸ பலநோக்குக் கூட்டுறவு சங்கத்துக்கு சொந்தமான காணியில் 5 பேச்சர்ஸ் காணியொன்றும் 45 லட்சம் ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இந்த வீட்டின் பெறுமதி இதுவரை மதிப்பிடப்படாது போனாலும், சுமாராக 1000 மில்லியன் ரூபாவுக்கு அதிகமானதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த வீடு அமையப் பெற்றுள்ள முழுமையான காணியின் அளவு 65 பேர்ச்சர்ஸ் ஆகும். இதில் 37 பேச்சர்ஸ் காணி யோசித்த ராஜபக்ஷவின் பெயரில் காணப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. எஞ்சிய காணி ஒரு பெண்ணின் பெயரில் காணப்பட்ட போதிலும் அப்படியான விலாசத்தில் குறிப்பிட்ட பெண் காணப்படாதுள்ளமை தெரியவந்துள்ளதாகவும் முக்கிய அரசியல் கட்சியொன்று தகவல் வெளியிட்டுள்ளது.