Breaking News

தற்கொலை அங்கி விவகாரம் – ரெஜினோல்ட் குரே, சிவாஜிலிங்கத்தையும் விசாரியுங்கள்!

தற்கொலை அங்கி தொடர்பில் தான் கூறிய கருத்திற்காக குற்றப்புலனாய்வு பிரிவினர் தன்னை விசாரிக்க முடியுமானால், ஏன் வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே, மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திடம் விசாரணை மேற்கொள்ள வில்லை என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் கேள்வி எழுப்பினார்.

‘இந்த தற்கொலை அங்கியானது, ஜனாதிபதியை இலக்கு வைத்ததாக இருக்கலாம்” என்று ஆளுனரும், ‘இது விடுதலை புலிகளை தவிர்ந்த வேறு தரப்பினரின் செயற்பாடு’ என்று சிவாஜிலிங்கமும் குறிப்பிட்டுள்ள நிலையில் ஏன் அவர்கள் மீது விசாரணை நடத்தப்படவில்லை என்றும் ஆவேசப்பட்டார்.

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவம் குறித்து முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்த கருத்து தொடர்பில் இன்று (சனிக்கிழமை) குற்றப்புலனாய்வு பிரிவில் அவர் வாக்குமூலம் வழங்கினார். வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் வெளியில் வந்த அவர் ஊடகங்களிடம் கருத்துரைக்கையில் இவ்வாறான கேள்விளை எழுப்பினார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

‘பத்திரிகைகளில் செய்திகளைப் பார்க்கும்போது, சகல பத்திரிகைகளிலும் வெள்ளவத்தை என்று தலைபிட்டு செய்திகளை பிரசுரித்துள்ளனர். அந்த பத்திரிகைச் செய்திகளில் மேலும் சில தகவல்களும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

கண்டெடுக்கப்பட்ட தற்கொலை அங்கி சுற்றப்பட்டிருந்த பத்திரிகை மிகவும் பழைய பத்திரிகை அல்ல. அது 7 வருடங்கள் பழைமையான பத்திரிகை அல்ல சில பத்திரிகைகள் இதனை பிரதான செய்தியாகவும் பிரசுரித்திருந்தது. இதுதான் ஊடகத்தின் சுபாவம். இதில் என்னிடம் விசாரணை எதற்கு?

அப்படியானால் தற்கொலை அங்கி குறித்து கருத்துரைத்த ஏனையவர்களிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும். வடமாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே ‘இது ஜனாதிபதியை இலக்கு வைத்ததாக இருக்கலாம்’ என்று குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதியின் பாதுகாப்பு குறித்து ஆளுனர் கருத்துரைத்துள்ளார். அவரிடம் விசாரிக்கவேண்டும்.

பாதூகப்புச் செயலாளர் ஹெட்டியாராச்சி ‘இது விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டது என்றும் இது பழைமையானது என்பதுடன் அண்மையில் இடம்பெற்ற செயற்பாடல்ல என்று’ குறிப்பிட்டுள்ளார். அப்படியானால் அதுகுறித்து அவரிடமும் விசாரணை செய்யவேண்டும்.

அதுமாத்திரமன்றி திவயின பத்திரிகையினைப் பார்த்தபோது, சிவாஜிலிங்கம் ‘இது விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டது அல்ல என்றும், வேறு ஒரு தரப்பினர் இதனை செய்துள்ளதாகவும்’ குறிப்பிடுகின்றார். ஏன் அவரை இங்கு அழைத்து விசாரிக்கவில்லை.

இதிலிருந்து ஒரு நன்றாக விளங்குகின்றது. இது முழுமையாக பக்கச்சார்பான ஒரு செயற்பாடாகும். அரசாங்கத்திற்கு எதிராக குரல் எழுப்பும் நபர்களை இந்த அரசாங்கம் நசுக்கும் ஒரு செயற்பாடாகும். இன்றைய விசாரணையின் போது எனது கருத்துக்கள் குறித்து சொல்லுக்கு சொல் வாசித்து அறிந்து கொண்டார்கள். இதன்போது சில விடயங்களை உறுதிப்படுத்தினேன். அதன்பின்னர் இந்த கருத்திலிருந்து என்னை விடுவித்தனர்’ என்றும் கூறினார்