எமக்கு பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள் வன்முறைகளை கட்டுப்படுத்தி காட்டுகிறோம்!
வடக்கிலுள்ள இராணுவத்தினரை அகற்றிவிட்டு பொலிஸ் அதிகாரங்களை எம்மிடம் கையளித்தால் யாழ்.குடாநாட்டில் தற்பொழுது இடம்பெற்றுவருகின்ற வன்முறைகளை உடனடியாக முடிவுக்குக்கொண்டுவருவோம் என வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் வழங்கிய செவ்வியில் தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வி முழுமையாகக் கீழே தரப்படுகிறது.
கேள்வி: தேசிய இனப்பிரச்சினைக்கு சமஷ்டி முறையிலான தீர்வு காணப்படவேண்டுமென வடமாகாணசபையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் ஜனாதிபதி யார் வேண்டுமென்றாலும் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கலாமென கூறியுள்ளார். இந்நிலையில் இப்பிரேரணையை நிறைவேற்றியது பயனுடையதாக அமையுமா?
பதில்: முதலில் நாங்கள் வடமாகாணசபை என்ற முறையில் மூன்று குழுக்களாகப் பிரிந்து தேசிய இனப்பிரச்சினைக்கான சமஷ்டி முறையிலான தீர்வு தொடர்பில் கருத்துக்களையும் முன்மொழிவுகளையும் பெற்றுக்கொண்டோம். பின்னர் இந்த முன்மொழிவுகளையும் கருத்துக்களும் வடமாகாணசபையினூடாக வரவேண்டும் என்பதற்காகவே நாங்கள் இதை பிரேரணை என்ற வடிவில் கொண்டுவந்தோம்.
எங்களுடைய முன்மொழிவுகளுக்கு வலு வைக் கொண்டுவருவதற்காகவே நாங்கள் இதனைப் பிரேரணையாக நிறைவேற்றியிருந் தோம். ஆனால் ஜனாதிபதி யார் வேண்டுமென்றாலும் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கலாமென கூறிய அடிப்படைக்கும் இதற்கும் தொடர்பில்லை.
வடமாகாணத்தின் பொதுமக்கள், சிவில் சமூகங்கள், பாராளுமன்ற அங்கத்தினர், அரசியல்வாதிகள் என எல்லோரும் சமஷ்டி முறையிலான ஆட்சியினையே விரும்புகிறார்கள். ஆகவே, தமிழ் மக்களுடைய ஏகோபித்த கருத்துக்களையும் எண்ணங்களையும் எடுத்துக்கூறவேண்டிய கடப்பாடு எங்களுக்கு இருக்கிறது. ஆகவே நாங்கள் அவற்றை எடுத்துக் கூறியுள்ளோம்.
எங்களுடைய இத்தீர்மானத்தை நிறைவேற்றுவார்களா? தட்டிக்கழிப்பார்களா? என எங்களால் தற்பொழுது உறுதியாகக்கூற முடியாது. ஆனாலும் நாங்கள் எங்களுடைய கடமைகளைச் சரியாக செய்யவேண்டும்.
குசல் பெரேராவின் புத்தக வெளியீட்டின்போது பலர் "நீங்கள் ஏன் சமஷ்டியை முன்மொழிகிறீர்கள்" என என்னிடம் கேட்ட னர். அதற்கு நான் "இலங்கையில் அரசி யல் வாதிகள் பல வருடங்களாக சமஷ்டியென்றால் பிரிவினை என்று அரசியல் செய்தமையாலேயே சிங்கள மக்கள் சமஷ்டியைக்கண்டு பயப்படுவதற்குக் காரணமாகும் அத்துடன் சமஷ்டி என்பது பிரிவினை அல்ல பிரிந்திருப்பவர்களை ஒன்றிணைப்பதே சமஷ்டியின் அடிப்படை.” என அவர்களுக்கு எடுத்துக் கூறினேன்.
ஆனால், தற்பொழுதும் கூட ஒரு சமஷ்டி முறை இருக்கிறது. அதாவது 1987 இல் ஒன்பது மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டபோதே சமஷ்டி ஓரளவுக்கு இலங்கையில் வந்துள்ளது எனக்கூற லாம். ஆனால் அந்த முறையில் இருக்கின்ற ஒரு பிரச்சினை என்னவென்றால் எங்களுடைய அரசியல் யாப்பானது தற்பொழுது ஒற்றையாட்சியின் அடிப்படையில் அமைந்துள்ளது. இந்த ஒற்றையாட்சி அரசியலமைப்புச் சட்டத்தின் மூலமாக மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் உண்டு. ஆனால் சமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பு என்றால் அவ்வாறு மத்திய அரசாங்கம் வழங்கிய அதிகாரங்களை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டுமானால் எங்களுடன் (மாகாண சபைகளுடன்) கலந்தாலோசித்து அதன் அனுமதியுடனே மீளப்பெறவேண்டும். இதுவே ஒற்றையாட்சிக்கும் சமஷ்டியாட்சிக்கும் உள்ள வேறுபாடாகும்.
இதற்கான ஒரு உதாரணத்தையும் நான் அங்கு எடுத்துக்கூறினேன். 1987 ஆம் ஆண்டு அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், கிராம சேவகர் ஆகிய மூவரும் எங்களுடைய (மா காண சபையின்) அதிகாரத்தின் கீழ் இருந்தார்கள். ஆனால் 1992 இல் அரசாங்கம் ஒரு சட்டத்தைக்கொண்டுவந்து அவர்கள் மூவரை
யும் மத்திய அரசின் கீழ் கொண்டுவந்தது.
தற்பொழுது வடமாகாணத்தில் இரண்டு விதமான அதிகார மையங்கள் இருக்கின்றன. ஆகவே சமஷ்டி முறையிலான ஆட்சி யின் கீழ் நிர்வாகம் செய்வதற்கு போதுமான வலு இருக்கும். ஆகவே இந்த உரித்தினை நாங்கள் ஒற்றையாட்சியின் கீழ் நாங்கள் இழந்திருக்கின்றோம். ஆகவே தான் இந்த சமஷ்டியின் முக்கியத்துவத்தை உணர்ந்து நாங்கள் வடமாணசபையின் மூலம் தீர்மானம் நிறைவேற்றினோம்.
கேள்வி: நீங்கள் வடமாகாணசபையின் பிரேரணையை முதலில் சபாநாயகரிடம் கையளித்தீர்கள். இதை எதிர்க்கட்சித்தலைவரிடம் முதலில் கையளித்திருக்கவேண்டும் என சர்ச்சை ஏற்பட்டுள்ளதே?
பதில்: ஆம். அவ்வாறு சர்ச்சை ஏற்பட்டது உண்மைதான். ஆனால் இவ்வாறு சர்ச்சை ஏற்படவேண்டிய அவசியமில்லை. ஏனென்றால், மூவரிடம் பிரேரணை கையளிப்பது தொடர்பில் ஏற்கனவே வடமாகாணசபையில் கலந்தாலோசிக்கப்பட்டது. சபா நாயகர் 225 பாராளுமன்ற அங்கத்தினர்களையும் உள்ளடக்கிய பாராளுமன்ற அரசியலமைப்பின் தலைவர், மேலும் அண்மையில் 22 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட கமிட்டிக்கும் தலைவராக உள்ளார். ஆகவே சபாநாயகர், பிரதமர், எதிர்க்கட்சித்தலைவர் ஆகிய மூவருக்கும் இந்த பிரேரணை கையளிக்கப்படவேண்டும் என முன்னரே கலந்தாலோசித்திருந்தோம்.
அதில் யாருக்கு முதலில் கையளிக்கப்படவேண்டும் என்பதில் எந்தப்பிரச்சினையுமில்லை. மேலும் ஒழுங்குமுறை அடிப்படையிலும் இவ்வாறே கையளிக்கவேண்டும். சென்றமுறை நான் இங்கு வந்திருந்தபோது என்னிடம் முன்மொழிவுகள் கைவசம் .இருந்ததாலும், பிரதமருக்கு வெளிநாட்டுப்பயணங்கள் இருந்தமையாலும் நான் எதிர்க்கட்சித்தலைவருடன் சேர்ந்தே பிரேரணையை முதலில் அவர்களுக்கு சமர்ப்பித்தேன்.
கேள்வி: யாழ்.குடாநாட்டில் வாள்வெட்டுக்கலாசாரம் தலைதூக்கியுள்ள நிலையில் மாகாண சபைக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் இந்த வன்முறைகள் ஆரம்பத்திலேயே முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருக்குமா? இவ்வாறான வாள்வெட் டுக் கலாசாரங்களை மட்டுப்படுத்த மாகாணசபை எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது?
பதில்: இராணுவத்தை வெளியகற்றி பொலிஸ் அதிகாரத்தை மாகாணசபைக்கு வழங்கினால் நாங்கள் கட்டாயம் இந்த வன் முறைகளை முடிவுக்குக் கொண்டுவரு வோம். இராணுவம், கடற்படை, விமானப்படை என முப்படைகளின் பிரசன்னமும் வடக்கில் காணப்படுவதாலும் சிங்கள பிரதேசங்களிலிருந்து சிங்கள பொலிஸார் இங்கு பணிக்கமர்த்தப்பட்டுள்ள நிலையிலும் அதிகாரம் எங்களுடைய கையில் இல்லை.
மேலும் இங்கு கவனிக்கவேண்டிய இன்னொரு விடயம் என்னவென்றால் இத்தனை ஆயிரம் இராணுவம், கடற்படை என்பன இங்கு குவிக்கப்பட்டிருந்தும் கூட இவ்வாறான பிரச்சினைகள் இங்கு நடைபெறுகின்றதென்றால் அங்கு ஏதோ ஒன்று நடக்கிறது. ஏதோ இரு இடத்தில் பிரச்சினை இருப்பதுபோல் எமக்குத் தெரிகின்றது. அத்துடன் இவ்வாறான பிரச்சினைகளுக்கும் பதில் சொல்ல முடியாமல் இருக்கிறது. ஆகவே வடக்கிலுள்ள இராணுவம் முற்றாக அகற்றப்பட்டு பொலிஸ் அதிகாரங்கள் எமக்குக் கிடைத்தால் யாழ்.குடாநாட்டில் அரங்கேறிவரும் இவ்வாறான வன்முறைச் செயல்களை கட்டாயம் தடுத்து நிறுத்துவோம். அதில் எவ்வித சந்தேகமும் இல்லை.
அடுத்தது இவ்வாறான குற்றச்செயல்களை தடுத்து நிறுத்த நான் சென்ற வருடமே பொலிஸாரையும் பொதுமக்களையும் குழுக்களாக அமைத்து ஒவ்வொரு இடங்களிலும் குறித்த காலப்பகுதிக்கு ஒருமுறை அந்தந்த இடங்களில் நடைபெறும் விடயங்களை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதற்கான ஒரு கருத்தாவணம் ஒன்றை தயாரித்தேன். அதற்கு சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க உடன் தொடர்புகொண்டு அதற்கு ஒப்புதல் பெற்றுக்கொடுத்தார். மேலும் பொலிஸ் மா அதிபரிடமும் நான் அதைக் குறித்துப்பேசி யிருந்தேன். அதற்கு அவரும் அனுமதியளித்திருந்தார். பின்னர் பிரதிப்பொலிஸ்மா அதிபரின் இடமாற்றத்தையடுத்து இந்த முயற்சி தாமதப்பட்டது. ஆனாலும் தற்பொழுது நாங்கள் இந்தக்குழுக்களை அமைக்கவுள்ளோம்.
பிரதேச, மாவட்ட, மாகாண என்ற மூன்று மட்டங்களின் அடிப்படையில் இந்த குழுக்களை அமைக்கவுள்ளோம். அத்துடன் மாகாண மட்டத்தில் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், உயர் நீதிமன்ற நீதிபதி, மாகாணசபை உறுப்பினர், உப செயலாளர் ஆகியோரையும் அழைத்து கூட்டமொன்றை ஏற்பாடுசெய்யவுள்ளோம். மாகாண சபை மட்டத்தில் இடம்பெறும் இந்தக்கூட்டத்தில் நாங்கள் மாகாணத்திலுள்ள குறைபாடுகள் அனைத்தையும் பற்றி கலந்துரையாடவுள்ளோம்.
மாவட்ட ரீதியிலும் இவ்வாறான குழுக்களை அமைத்து கூட்டங்களை நடத்த ஏற்பாடு செய்யவுள்ளோம். இவ்வாறு ஐந்து மாவட்டங்களிலும் எங்களுடைய மாகாணசபை உறுப்பினர்களின் தலைமையிலும் உயர் பதவிகளிலுள்ள பொலிஸாரின் பங்களிப்புடனும் இவ்வாறான கூட்டம் மேற்கொள்ளப்படும்.
பிரதேச ரீதியில் பிரதேச சபை செயலாளர்கள், கிராம சேவகர்கள், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளின் தலைமையில் கூட் டம் நடத்தப்படும். ஆகவே அடி மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் நாங்கள் இவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளோம். இதன் முதலாவது கூட்டம் எதிர்வரும் 18 ஆந்திகதி என்னுடைய தலைமையில் இடம்பெறவுள்ளது.
நாங்கள் இவ்வாறான வன்முறைச்சம்பவங்களை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டவாறே உள்ளோம். இதற்கு ஜனாதிபதி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதனை அனுப்பியிருந்தார். ஆகவே பொலிஸாருக்கும் எங்களுக்கும் இடையில் தமிழ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒரு பாலமாக இருந்து இவ்வாறான செயற்றிட்டங்களை முன்னெடுக்க உதவியாக இருக்கிறார். அதன் விளைவாகவே அண்மையில் நடைபெற்ற களவு, வாள்வெட்டு போன்ற வன்முறைச்சம்பவங்கள் பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கிவிட்டன.
கேள்வி: இராணுவத்தினரை முற்றாக வடக்கிலிருந்து அகற்றவேண்டும் அல்லது முகாமுக்குள் முடக்கவேண்டும் என்பதில் நீங்கள் எதில் உறுதியாக இருக்கின்றீர்கள்?
பதில்: முடக்கிவைப்பதால் பிரச்சினைகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது. ஆகவே படையினரை வடக்கிலிருந்து முற்றாக வெளியகற்றவேண்டும் என்பதிலேயே மிகவும் உறுதியாக காணப்படுகின்றேன். ஏனென் றால் தற்பொழுதும் படையினர் முகாமுக்குள் முடங்கியிருப்பதாகத்தான் கூறுகின்றார்கள்.
ஆனால் ஒவ்வொருநாளும் காலையில் ஆறு, ஏழு இராணுவத்தினர் சைக்கிளில் உலா வருகின்ற நிலைமை தொடர்கின்றது. இதனால் பொதுமக்கள் இன்னும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். ஆகவே முடக்க வேண்டும் என்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதிலேயே உறுதியாக இருக்கின்றேன். என்னுடைய மாணவனும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ரவிராஜை சுட்டுக்கொன்றுவிட்டு சுட்டவர்கள் இராணுவ முகாமுக்குள்ளேயே திரும்பிவிட்டனர்.
கேள்வி: நினைவேந்தல் வாரம் இன்னும் சில நாட்களில் நடைபெறவுள்ளது. ஆகவே இம்முறையும் நினைவேந்தல் வாரம் அச்சங்கள், அசம்பாவிங்கள் இன்றி நடைபெறுமா?
பதில்: சென்ற வருடம் கூட பல பிரச்சினைகள் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நாங்கள் பொலிஸாரிடம் பேசிக்கொண்டதற்கிணங்க எப்பிரச்சினைகளும் இல்லாமல் நினைவேந்தல் வாரம் இடம்பெற்றது. ஆகவே நான் இம்முறையும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் சென்ற முறை நினைவேந்தல் வாரம் எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் சுமுகமாக இடம்பெற்றது. ஆகவே இந்தமுறையும் தங்களது உதவியினை தர வேண்டும் என அவருக்கு கடிதம் அனுப்பிவிட்டே நான் கொழும்புக்கு வந்துள்ளேன். ஆகவே பிரச்சினைகள் ஏற்படும் என நான் நினைக்கவில்லை. மேலும் நான் பொலிஸ் அத்தியட்சகரிடம் இந்த நினைவேந்தல் வாரம் குறித்து விளக்கியுள்ளேன்.
அதாவது இந்த நினைவேந்தல் வாரம் என்பது பிரார்த்தனை செய்வதற்கான ஒரு தருணம். ஆகவே மக்கள் எங்கிருந்தும் வந்து தங்கள் பிரார்த்தனைகளை ஏறெடுக்கமுடியும். அத்துடன் இறந்தவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தியும் பிரார்த்தனைகளிலும் ஈடுபடுவார்கள். அதோடு மக்களுக்கும் அந்த இடம், நிகழ்வுகள் குறித்தும் முதலமைச்சர் தலைமையில் ஒரு சிறு உரையொன்று இடம்பெறும். ஆகவே அசம்பாவிதங்கள் ஏற்படாதவாறு சென்றமுறையைப்போல் இம்முறையும் சுமுகமாகவே நினைவேந்தல் வாரம் இடம்பெறும் என நான் எதிர்பார்க்கின்றேன்.
கேள்வி: புனர்வாழ்வமைச்சின் 65,000 வீட்டுத்திட்டம் மக்களுக்கும் சீதோஷ்ண நிலைக்கும் பொருத்தமற்றது என்ற நிலை ப்பாட்டில் இருக்கின்றீர்கள். உங்களுடைய இந்த எதிர்ப்பை பிரதமர், ஜனாதிபதி, புனர்வாழ்வு அமைச்சர் ஆகியோரிடம் வெளிப் படுத்தினீர்களா? 65,000 வீட்டுத்திட்டத்திற்கான மாற்றுத்திட்டம் ஏதேனும் உங்களிடம் உண்டா?
பதில்: ஆம். வெளிப்படுத்தியுள்ளேன். மக் கள் வீடுகளைக்கேட்கிறார்கள் என்று புனர்வாழ்வு அமைச்சு கூறுகிறது. ஆம். அது உண்மை. மக்கள் வீடுகளைக்கோருகிறார் கள் தான். ஆனால் மக்கள் 2.1 மில்லியன் பெறுமதியில் சூழலுக்கு பொருத்தமற்ற இவ்வாறான வீடுகளைக்கேட்கவில்லை. அத்து டன் இதற்கான மாற்றத்திட்டமொன்றையும் நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம். அதாவது எங்களுடைய பொறியியலாளர்கள் இந்த 2.1 மில்லியன் ரூபாவில் திறமான இரண்டு வீடுகளைக்கட்டுவது தொடர்பில் அறிக்கையொன்றை சமர்ப்பித்திருந்திருக்கிறார்கள். ஆகவே நாங்கள் அறிக்கையை தற்போது பரிசீலித்து வருகிறோம்.
கேள்வி: அமைச்சரவைக் கூட்டங்களில் முதலமைச்சர் என்ற ரீதியில் உங்களுக்கு அழைப்பு விடுத்தும் நீங்கள் தொடர்ச்சியாக கலந்துகொள்ளவில்லையே?
பதில்: ஒரு அமைச்சரவைக்கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்கள். உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் எனக்கு அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குபற்ற முடியவில்லை. பின்னர் சமுகமளிக்கமுடியாமற் போனதற்கான காரணத்தையும் வெளிப்படுத்தியிருந்தேன். ஆனால் அதன் பின்னர் எந்தவொரு அமைச்சரவைக் கூட்டத்துக்கும் எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கேள்வி : வடமாகாண சபைக்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்ற நிதி முறையாக செலவழிக்கப்படாமல். அது மீண்டும் திறைசேரிக்கே செல்கின்றதென்று கூறப்படுகிறது. இதன் உண்மைத்தன்மை என்ன?
பதில்: இது முற்றிலும் பொய்யான ஒரு விடயம். சிலர் தங்களுடைய குறுகிய அரசியல் நோக்கத்துக்காக நாங்கள் மத்திய அரசிடம் கிடைக்கும் நிதியை செலவழிப்பதில்லை எனக்கூறுகிறார்கள். சென்ற வருடம் கிடைத்த மத்திய அரசின் நிதியில் நாங்கள் 95 வீதத்திலிருந்து 100 வீதத்துக்கு இடைப்பட்ட நிதியை செலவழித்துள்ளோம்.
மேலும் சில அரசியல்வாதிகள் எமக்கு அரசியல் அனுபவம் இல்லை. முறையாக நிர்வாகம் நடத்த தெரியவில்லை என்ற குற்றச்சாட்டையும் முன்வைக்கின்றார்கள்.
நாங்கள் பணத்தையும் பலத்தையும் முறை யாகவே பயன்படுத்துகின்றோம். அத்துடன் இவ்வாறு குறைகூறும் அரசியல்வாதிகள் எதையும் நினைத்தவுடனேயே உடனடியாக செய்யவேண்டும் . அதுவே அதிகாரத்திறமை என நினைக்கிறார்கள்.
ஆனால், நாங்களோ அவ்வாறு நினைக்க வில்லை. எது மக்களுக்கு நன்மை பயக் கும், எது சட்டரீதியானது, எதை மக்கள் வர வேற்பார்கள், எது தூரநோக்கில் மக்களுக்கு நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் என்ப வற்றை ஆராய்ந்தே நடவடிக்கை எடுக்கின் றோம். நாங்கள் தான்தோன்றித்தனதமாக எதை யும் செய்வ தில்லை என்பதை முதலில் இவ்வாறான குற்றச்சாட்டை முன்வைப்பவர் கள் விளங்கிக்கொள்ளவேண்டும்
கேள்வி: வட மாகாண முதலமைச்சு நிதி யத்திற்கு முன்னாள் ஆளுநர் மறுப்புத் தெரிவித்திருந்துள்ளார். முதலமைச்சு நிதி யம் குறித்து தற்போதைய ஆளுநர் ரெஜி னோல்ட் குரேயின் கருத்து என்ன?
பதில்: முதலமைச்சு நிதியம் தொடர்பில் ஆளுனர் ரெஜினோல்ட் குரே எவ்வித மறுப் பையும் தெரிவிக்கவில்லை. தற்போது முதல மைச்சு நிதியத்துக்கான சட்டங்கள் அமைத் தல் மற்றும் அதற்கான மொழி பெயர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றோம். விரைவில் இந்த முதலமைச்சு நிதியம் தொடர்பில் ஆளுநருடன் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளோம்.
கேள்வி : அவ்வாறு முதலமைச்சு நிதியம் ஆரம்பிக்கப்பட்டால் வெளிநாடுகளிலிருந்து நிதி பெற்றுக்கொள்ள முடியும். அவ்வாறு பெறப்படும் நிதி மத்திய வங்கியின் திறைசேரி மூலமாகவா பெற்றுக்கொள்ளப்பட வேண் டும்?
பதில்: ஆம். தற்போதைய சட்டத்தின் அடிப்படையில் நிதி வரவேண்டியது அவசி யம். அத்துடன் இது தொடர்பில் வேறு விமர் சனங்கள் எழக்கூடாதென்பதற்கும் வெளிப் படைத்தன்மைக்காகவும் எங்களுடைய பொறுப்பாளர் சபையில் வெளிவளத் திணை க்களத்தின் அங்கத்தவர் ஒருவரையும் நியமி த்துள்ளோம்.








