Breaking News

யுத்தத்தில் இரண்டு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டது : வட மாகாண ஆளுநர்



அபிவிருத்தி தேவையென்றால் அரசாங்கமும் வட மாகாணசபையும் ஒற்றுமையாக செயற்ப டவேண்டும் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – விஸ்வமடு பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தினால் இரண்டு தரப்பிலும் இழப்புக்கள் ஏற்பட்டதாக குறிப்பிட்ட அவர், இந்த சம்பவங்களை மறந்து நாட்டை அபிவிருத்தி பாதையை நோக்கி கொண்டுசெல்ல வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

நாம் வணங்கும் தெய்வங்களான புத்தர் மற்றும் விஸ்ணு ஒரு ஆலயத்தில் ஒற்றுமையாக இருக்கும்போது வணங்கச்செல்கின்ற நாம் மட்டும் ஏன் பிரிவினைவாதத்தை கடைப்பிடிக்க வேண்டும் என அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆகியோர் வெற்றிபெறவில்லை என தெரிவித்த அவர், ஒருதாய் பிள்ளைபோல் வேலை செய்தால் மட்டுமே நாட்டை கட்டி எழுப்பமுடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நிகழ்வில் ஆளுநரின் செயலாளர், சிவில் பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள், பாதுகாப்பு பிரிவு உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.