வாக்களித்த பின் பிரபலங்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா..?
தமிழக சட்டப்பேரவைக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது. திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரத்தில் உள்ள சாரதா நடுநிலைப்பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, "தேர்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேர்தல் ஆணையம் ஒரு சில இடங்களில் சிறப்பாக செயல்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் பணப்பட்டுவாடா ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது" என்றார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேனாம்பேட்டையில் உள்ள பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 234 தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும். முறைகேடு நடந்தாலும் அதிமுக ஆட்சிக்கு வர கூடாது என மக்கள் நினைக்கிறார்கள் என்றார்.
சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசுகையில், ஒவ்வொருவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். இந்த தேர்தல் வித்தியாசமானது என்பது உண்மைதான். பண பலம் பற்றி கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.
சென்னை அண்ணாநகரில் வாக்களித்த பின்னர் தா.பாண்டியன், "தமிழகத்தில் அமைதியாக தேர்தல் நடக்க மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்" என்றார்.
சென்னை ஆதம்பாக்கத்தில் உள்ள பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை பதிவு செய்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், ரூ.570 காேடி சம்பவத்தில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள சமாஜம் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசுகையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு நம்பகத்தன்மையுடன் இல்லை. சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
சென்னை மந்தவெளியில் வாக்களித்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நடிகை குஷ்பு கூறுகையில், "அதிமுக அரசுக்கு பாடம் புகட்ட மக்கள் தயாராகி விட்டனர். தோல்வி பயத்தால் அதிமுகவினர் பணப்பட்டுவாடா செய்துள்ளனர். பறிமுதல் செய்யப்பட்ட 99 சதவீத பணம் அதிமுகவினருடையது என்றார்.
நடிகரும் இயக்குனருமான பார்த்திபன் தி.நகர் தொகுதியில் வாக்களித்திவிட்டு செய்தியாளர்களை சந்தித்தபோது. அனைத்து வாக்காளர்களும் கண்டிப்பாக வாக்களிக்க வர வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.








