Breaking News

ஒரு மணிநேரம் முடங்கிய வாக்கு இயந்திரம்....காஞ்சியில் கடுகடுத்த வாக்காளர்கள்



காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் தொகுதியில் வாக்குப்பதிவு மையத்தில் சுமார் ஒரு மணி நேரம் வாக்கு இயந்திரம் இயங்காமல் முடங்கியது வாக்காளர்களை எரிச்சலுக்குள்ளாக்கியது.

காஞ்சிபுரம் தொகுதியில் மொத்தம் 1297 வாக்கு மையங்கள் நிறுவப்பட்டு அதன் கீழ் தொகுதி முழுவதும் 4008 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 595 வாக்குச்சாவடிகள் பதற்றமான வாக்குச்சாவடிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. 1970 வாக்குச் சாவடிகள் கண்காணிப்பு கேமிரா பொறுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் தொகுதியில் முதன்முறையாக வாக்களிக்கும் நபருக்கு தான் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிப்படுத்தும் சிலிப் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



மாவட்டத்தில் காஞ்சிபுரம் தொகுதியில் மட்டுமே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் தொகுதியில் ஒக்கப்பிறந்தான்குளம் மற்றும் வைகுண்டபெருமாள் கோவில் தெரு என்ற 2 இடங்களில் வாக்கு இயந்திரம் பழுதானது. ஒக்கப்பிறந்தான் குளத்தில் காலை வாக்குப்பதிவு துவங்கிய 7 முதல் 8 மணிநேரம்வரை பழுதானதால் வாக்காளர்கள் சுமார் 1 மணிநேரம் எரிச்சலுடன் காத்திருக்கவேண்டியதானது. அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் போராடி வாக்கு இயந்திரத்தை சரிசெய்த பின் வாக்குப்பதிவு தொடர்ந்து நடந்தது. 

திமுக வேட்பாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் வாக்குப்பதிவு செய்த வைகுண்டபெருமாள் கோவல் தெரு சாவடியில் அரைமணிநேரம் இயந்திரம் பழுதாகி அதிகாரிகளை பதற்றத்திற்குள்ளாக்கியது. இயந்திரம்சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு துவங்கியபின்னரே அதிகாரிகள் சகஜநிலைக்கு திரும்பினர்.

மற்ற வாக்குச்சாவடிகளில் விறுவிறுவென வாக்குப்பதிவு நடந்துவருகிறது.