Breaking News

நிரந்தரமான அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்! - சம்பந்தன் வலியுறுத்தல்



இலங்கையின் அனுசரணையுடன் கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமெனவும், அந்த தீர்மானத்தின் அடிப்படையில் உண்மைகள் கண்டறியப்பட வேண்டுமெனவும், உண்மையின் அடிப்படையில் நீதி வழங்கப்பட்டு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டுமெனவும் நடைபெற்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்விடயத்தை தெரிவித்தார்.

நடைபெற்ற சம்பவங்கள் இனிமேலும் நடைபெறாமல் இருக்க வேண்டுமாயின் ஒரு நிரந்தமான நியாயமான அரசியல் தீர்வு எட்டப்பட்டு, மக்கள் அந்த அதிகாரத்தை பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கக்கூடிய ஒரு நிலைமை இருக்கவேண்டுமென்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வுகள் தொடர்ந்தும் நடைபெற்;றுக்கொண்டிருப்பதாகவும் சில அதிகாரிகள் அதற்கு உடந்தையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டிய அவர், தமிழ் மக்கள் பிளவுபடாமல் ஒற்றுமையாக இருப்பது அவசியம் என்றும் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, எதிர்காலத்தில் வடக்கின் காணி பிரச்சினை தொடர்பில் நாடாளுமன்றில் ஒத்திவைப்பு வேளை விவாதமொன்றை நடத்தி, அதுகுறித்து கேள்வி எழுப்பவேண்டியுள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடு கடன் சுமையில் சிக்கியுள்ள நிலையில், அதிலிருந்து விடுபட வேண்டுமென்றால், முன்னேற வேண்டுமென்றால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதாக இருந்தால், அதன் மூலம் நாடு அபிவிருத்தி ஏற்பட்டு, மக்கள் மத்தியில் மாற்றம் ஏற்பட வேண்டுமாயின், அதற்கு அரசியல் ரீதியான தீர்வு அவசியம் என குறிப்பிட்ட எதிர்க்கட்சித் தலைவர், அரசியல் தீர்வென்பது நாட்டிற்கும் அவசியம் என குறிப்பிட்டார்.

அவ்வாறான ஒரு புரிந்துணர்வும் நலலிணக்கமும் ஏற்படாத பட்சத்தில், எந்தவொரு அரசாங்கமும தமது இலக்கை அடைய முடியாதென எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.