பேரவையின் இறுதித் தீர்வு ; தமிழ் , சிங்கள மொழிபெயர்ப்பில்..!!
தமிழ் மக்கள் பேரவையின் இறுதித் தீர்வு பேரவையின் ஏகமனதான அங்கீகாரத்துடன் வெளியிடப்பட்டு இன்று அது இந்தியா மற்றும் சர்வதேச நாடுகளிடம் கையளிக்கப்பட்டு வருவதும், மேலும் இது தமிழ் மற்றும் சிங்கள மொழிபெயர்ப்பின் பின் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படுவதற்கான ஆயத்தங்கள் மிகவேகமாக நடைபெற்றுவரும்,
இவ்வேளையில், பேரவை தனது அடுத்த கட்ட நகர்விற்கு மிகவும் நிதானமாக நகர்ந்து வருகின்றது. இதன் முதல் கட்டமாக தனது உபகுழுக்களை முடுக்கி விட்டு அவ் உபகுழுக்கள் தமது வேலைத்திட்டங்களை மிக விரைவில் ஆரம்பிக்கவிருக்கின்றன.
இந்த வகையில் கலை கலாச்சாரத்திற்கான உபகுழு, சர்வதேச விசாரணையை வலியுருத்தி மக்களை அணிதிரட்டி எமக்கான நியாயத்தை வேண்டி நிற்பதற்காக பொறுப்புக்கூறலுக்கான உபகுழு என்பன ஆரம்பிக்கப்பட்டு அவை தனது ஆரம்ப கட்ட வேலைகளில் சுறுசுறுப்பாக இறங்கியுள்ளன.
இதன் அடிப்படையில், கலை கலாச்சாரத்திற்கான உபகுழுவை ஒருங்கிணைப்பது சம்மந்தமான முக்கிய பொறுப்புக்கள், மற்றும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் பற்றிய முடிவுகளை பேரவையின் செயற்பாட்டுக்குழு சமய, மற்றும் சமூக பெரியார்களுடன் இணைந்து கலந்தாலோசித்து அவற்றை அவர்களின் தலைமையிலேயே ஆரம்பித்துவைத்துள்ளனர். இவர்கள் இன்னும் ஒரு சில தினக்களில் ஒரு பகிரங்க அழைப்பை விடுத்து தமது செயற்பாட்டை மக்கள் மத்தியில் ஆரம்பிக்கவுள்ளனர்.
அடுத்து, இறுதியுத்தத்தில் மிகவும் கொடியமுறையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட அந்த நாட்கள் நெருங்கிவரும் இவ்வேளையில், ஒரு சர்வதேச விசாரணை உள்ளக விசாரணையாக முடக்கப்பட்டதற்கான தமிழ்த் தலைமைகள் ஆதரவு வழங்கியதற்கான பிரதான காரணமான 2016 இற்குள் அதி உச்ச இறுதித்தீர்வு என்ற உத்தரவாதம் இன்று ஒரு மிகவும் கேள்விக்குறியான வெறும் கணிப்பாக மாறியதனாலும், தமிழ் மக்கள் பேரவையின் பொறுப்புக்கூறலுக்கான உபகுழு மிகவும் விரைவாக சர்வதேச விசாரணையை வலியுருத்தி ஒரு காத்திரமானதும், மிகவும் வீரியம்கொண்டதுமான நகர்வுகளை மேற்கொள்ளவுள்ளது.
வடகிழக்கு தழுவிய இவ் நடவடிக்கைகள் நிச்சயம் சர்வதேசத்திடம் ஒரு மிகவும் தீர்க்கமான முடிவை வேண்டி நிற்கும் என்பதும் இவ்வேளையில் சர்வதேசம் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் மற்றும் போர்க்குற்றங்களுக்கான பொறுப்புக்கூறல் என்பவற்றை இரு வேறு விடயங்களாக பிரித்து கையாள்வதா இல்லை இரண்டையும் இணைத்து கையாள்வதா என்ற ஒர் முடிவிற்கு வரவேண்டிய நிலை ஏற்படும் என்பதை நிச்சயமாக கூறமுடியும்.
வடக்கு கிழக்கு தழுவிய தமிழ் மக்களின் சர்வதேச விசாரணைக்கான ஒருமித்த குரலை ஓங்கி ஒலித்து சர்வதேசத்தின் மனக்கதவை தட்டித்திறக்க பேரவையின் இவ் உபகுழு ஆரம்பிக்கவுள்ள வேலைத்திட்டங்களிற்கு மிகவும் முக்கிய நிபுணர்கள் உள்வாங்கப்பட்டு வரும் இவ்வேளையில் எதிர்வரும் நாட்களில் இவ் உபகுழுவும் ஒரு மிகவும் முக்கிய அறிவித்தலை வெளியிட்டு தனது நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளது.
இதற்கு அனைவரதும் ஆதரவை மிகவும் அன்புடன் வேண்டி நிற்கும் இவ்வேளையில் எதிர்வரும் நாட்களில் இது தொடர்பான முக்கியமான உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளிவரும் தருணத்தில் உடனடியாக தங்களது பங்களிப்பை வழங்கும் படி மிகவும் அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றோம்.








