Breaking News

யாழ்ப்பாணத்தின் கல்வி நிலை கேள்விக்குறியாக உள்ளது - வடக்கு முதல்வர்



கல்விப் புலத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது அதன் தரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் எம் மாணவர்களை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும் விசேடமாக ஆசிரியர்களுக்கு உண்டு என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். கல்வி வலயத்தினால் இன்று (வெள்ளிக்கிழமை) யாழ். வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் ஆரம்பிக்கப்பட்ட ‘ஆசிரியர் மாநாடு – 2016′ இல் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், கற்றவர்களும் சமயப்பற்றுடையவர்களும் கலை ஆர்வம் கொண்டவர்களும் கடமை வீரர்களும் விளைந்த இப் பூமியில் இன்று கல்விக்கு பஞ்சம், சமயத்துக்குப் பஞ்சம், கலையில் வஞ்சம், கடமையில் வஞ்சம். சுயநலத்தில் தஞ்சம் அடைந்துள்ளோம்.

குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்கள்

எமது இளைய சமுதாயம் தான்தோன்றித்தனமாக நினைத்த மாத்திரத்தில் மிகப்பாரிய குற்றச்செயல்களில், பாலியல் சேஷ்டைகளில் ஈடுபடுகின்றார்கள். மிகப் புகழ் பூத்த பாடசாலைகளில் கல்வி கற்கின்ற திறமை மிக்க பல மாணவர்கள் கூட இன்று பாரிய குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதை நாம் பத்திரிகைகள் வாயிலாகவும் நேரடியாகவும் அறிந்தும் கேள்விப்பட்ட வண்ணமும் உள்ளோம்.

படித்த பண்பாடான குடும்பங்களில் பிறந்த மாணவ மாணவியரே இவ்வாறான குற்றச்செயல்களில் பெரும்பாலும் ஈடுபடுகின்றனர் என்று கூறக் கேட்கின்றோம். கல்லூரி மாணவியர்க்குக் குற்றச் செயல்களுடன் தொடர்புண்டு என்கின்றது சில செய்திகள்.

காரணம் என்னவாக இருக்கும் என்று ஆராய்கையில், இந்த அவசர உலகத்தில் பெற்றோர்களின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கப்பெறாத பல மாணவச் செல்வங்களே இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றார்கள் என்பது ஒரு பொதுவான கருத்தாக காணப்படுகின்றது.

க.பொ.த. சாதாரண தர அடைவு மட்டம் வீழ்ச்சி

யுத்தத்திற்கு முன்னர் இலங்கையில் யாழ்ப்பாணக் கல்வி வலயம் கல்வியில் முதலிடம் வகித்தது. மீண்டும் 2009ற்கு பின்னர் படிப்படியாக வளர்ச்சியுற்று வருகின்ற போதும் இன்னும் முழுமையான நிலையை அடையவில்லை. க.பொ.த. உயர்தரத்தில் வடக்கு மாகாணம் முதலிடம் பெற்றாலும் அறிவு ரீதியாக நாம் இன்னும் பின்தங்கிய நிலையிலேயே இருக்கின்றோம்.

இந்நிலை மாற்றப்பட வேண்டும். கா.பொ.த சாதாரண தர அடைவு மட்டம் மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. பாடங்கள் தொடர்பான ஆசிரியர், மாணவ மாணவியரின் தொடர் அவதானிப்புக் குறைவே, பெறுபேறுகளின் வீழ்ச்சிக்கு காரணமாகும் என நினைக்கின்றேன்.

அதிகரிக்கும் போதைப்பொருள் பாவனை

அண்மைக்காலமாக எமது மாணவர்கள் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டுள்ளமை வேதனையைத் தருவதாக அமைகின்றது. யுத்த காலத்தில் கூட ஒழுக்கத்தை இறுக்கமாக கடைப்பிடித்த இந்த சமூகம், யுத்தம் முடிவுற்று சமாதான நிலை தோன்றிய பின்னர் ஒழுக்கக் குறைவுள்ள போதைப்பொருள் பாவனையில் நாட்டம் கொண்டிருப்பது மனவேதனையைத் தருகின்றது.

வேண்டுமென்றே தமிழ் சமூகத்தை நன்கு திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாசாரம், மேம்பாடு ஆகிய அனைத்தையும் சீரழித்து ஒட்டுமொத்தத்தில் இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்ப நடவடிக்கைகளாக இவை அமைந்துள்ளனவோ என்று எண்ணத் தோன்றுகின்றது.

பாதுகாப்பு படையினர் எதற்கு?

எம்மைச் சுற்றி ஒரு லட்சத்து ஐம்பது ஆயிரம் இராணுவ வீரர்கள் தரித்து நிற்கின்றனர். அதற்கும் மேலாக கடற்படை, விமானப்படை, பொலிஸார் என காவற் படைகள் தரித்து நிற்கின்றன. அப்படியிருந்தும் பல்லாயிரம் கிலோக்கள் கேரளக் கஞ்சா, அபின் போன்ற போதைப்பொருட்கள் தினமும் கடல் மூலமாக கடத்தி வரப்படுவதாக அறிகின்றோம். அப்படியானால் இவற்றிற்கு யார் காரணம்?

எமது மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை முற்றாகச் சீர்குலைக்க வேண்டும் என்ற முழு நோக்கில், பாடசாலைகளை நோக்கியதாக இப் போதைப்பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்று அறிகின்றோம். எத்தனை தான் பிறரின் தூண்டுதல்கள் இருப்பினும் எமது மக்கள் எமது இளைஞர் சமுதாயம் இவற்றிற்கு அடிமையாகி ஒரு சில நன்மைகளுக்காக இவ்வாறான இழிசெயல்களில் ஈடுபடுவது அவர்களின் தாயைப்பழிக்குஞ் செயலுக்கு ஒப்பானதாகும்.- என்றார்.