Breaking News

வலி. வடக்கு உயர்பாதுகாப்பு வலய இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை



யாழ்ப்பாணம் காங்கேசன்துறை – மாவிட்டபுரம் கோவிலுக்கு அருகிலுள்ள வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கான இராணுவ சோதனைச் சாவடி நிரந்தரமாக அகற்றப்படவுள்ளது.

இதனால் எந்தவொரு சிரமங்களும் இன்றி பொது மக்கள் காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்குச் சென்று வர முடியும் என குறிப்பிடப்படுகிறது.

வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்கு தரைவழியாக காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றில் பிரதான நுழைவாயில் காணப்படுகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திற்கு சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காங்கேசன்துறை பகுதியிலுள்ள 109 ஏக்கர் நிலப்பரப்பினை மக்களுடைய மீள்குடியேற்றத்திற்காக விடுவித்திருந்தார்.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள இராணுவத்தினரின் முகாம்கள் அகற்றப்படாத காரணத்தினால் பொது மக்கள் குடியேற அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.

அத்துடன் விடுவிக்கப்பட்ட பகுதிகளில் காணப்படும் மக்களுடைய காணிகளை பார்வையிடுவதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

இந்நிலையில் இராணுவத்தினர் அப்பகுதியிலுள்ள முகாம்களை கட்டம் கட்டமாக அகற்றி வருகின்றனர்.இதற்கமை காங்கேசன்துறை வீதி மாவிட்டபுரம் ஆலயத்திற்கு அருகில் உள்ள உயர்பாதுகாப்பு வலய பிரதான நுழைவாயிலுடன் காணப்படும் சோதனைச் சாவடியினை மிக விரைவில் அகற்றவுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.