Breaking News

நாடாளுமன்ற மோதல் விவகாரம் : இன்று தீர்மானம் எடுக்கப்படும்



நாடாளுமன்றத்தில் மோதலில் ஈடுபட்ட உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான இறுதித் தீர்மானம், இன்று எடுக்கப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு கூடவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென சபாநாயகர் நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவ பாதுகாப்பு நீக்கப்பட்டமை குறித்து, ஒன்றிணைந்த எதிரணியினர் நேற்று முன்தினம் நாடாளுமன்றில் எழுப்பிய கேள்வியை தொடர்ந்து, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்களால், நாடாளுமன்றில் பெரும் அமளி துமளி ஏற்பட்டு கைகலப்பில் முடிந்தது.

சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக பிரதி சபாநாயர் திலங்க சுமதிபால மற்றும் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவினர், நேற்று சபாநாயகரிடம் அறிக்கை சமர்ப்பித்ததோடு, குறித்த அறிக்கையில், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணவீர ஆகியோர் மீது கடும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த அறிக்கையின் பிரகாரம் இன்று கூடும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்பட்டு, இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் இவ்வாறான செயற்பாட்டிற்கு, அவர்கள் சார்ந்த கட்சிகளே பொறுப்புக்கூற வேண்டும் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.

இதேவேளை, நாடாளுமன்ற மோதலில் படுகாயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித் சமரசிங்க, நேற்று வீடு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.