வடக்கு மக்களின் நிலங்களில் வாழும் இராணுவம் உடன் வெளியேற வேண்டும் : ஐங்கரநேசன்
வடக்கிலுள்ள தமிழ் மக்களது காணிகளில் இராணுவம் நிலைகொண்டிருப்பதை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதென தெரிவித்துள்ள வட மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், ஆண்டவனே வந்து கூறினாலும் வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறவேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கும் வைபவமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றுவது தமது நோக்கமல்லவென்றும், இராணுவத்திடமிருந்து பயன்களை பெறவேண்டும் எனவும் நேற்று முன்தினம், கிளிநொச்சியில் இடம்பெற்ற கட்டட திறப்புவிழாவொன்றில் கலந்துகொண்ட வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்திருந்தார். இந்நிலையில், ஆளுநரின் இந்தக் கருத்து, தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு எதிரானதென தெரிவித்த ஐங்கரநேசன், மக்களுடைய காணிகளில் இராணுவம் இருப்பதும், அதற்கு சார்பாக இவ்வாறு கருத்துக்களை வெளியிட்டு வருவதும் தவறானதென குறிப்பிட்டுள்ளார்.
மேலும், வட்டகச்சியில் அமைந்துள்ள விவசாய பண்ணையின் பெரும்பாலான நிலத்தை இராணுவத்தினர் அபகரித்து வைத்துக்கொண்டு மக்களை செல்லவிடாது தடுத்துக்கொண்டிருப்பதாக சுட்டிக்காட்டிய ஐங்கரநேசன், வட மாகாண சபை நிர்வகிக்க வேண்டிய முன்பள்ளிகளையும் இராணுவத்தினரே நிர்வகித்துக்கொண்டு, சிறார்களுக்கு சிவில் பாதுகாப்பு பொறிக்கப்பட்ட உடைகளையும் வழங்கி வருவது இராணுவத்தின் எதேச்சாதிகாரமான செயற்பாடென்றும் இவை தடுத்து நிறுத்தப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.








