வட மாகாணசபைக்குள் மீண்டும் தோன்றியது குழப்ப நிலை!
வடமாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வு திட்டம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்மந்தனிடம் கையளிக்கப்படுவதற்கு முன்பதாக, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டமை தொடர்பில் வடமாகாண சபை ஆளுங்கட்சிக்குள் குழப்பம் உருவாகியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.
இலங்கை அரசாங்கம் அரசியலமைப்பு மறுசீரமைப்பு முயற்சி ஒன்றை மேற்கொண்டுவரும் நிலையில், அதில் வடமாகாண தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளும் இடம்பெற வேண்டும். என்னும் அடிப்படையில் மாகாண சபையின் 19 உறுப்பினர்கள் கொண்ட குழு, முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் இணைத் தலைமையில் உருவாக்கப்பட்டு, அதில் தலா 6 உறுப்பினர்கள் கொண்ட 3 உப குழுக்கள் உருவாக்கப்பட்டு தமிழர்களின் நீண்டகால வரலாற்றை அடிப்படையாக கொண்டு அரசியல் தீர்வு திட்டம் தயாரிக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்வு திட்டம் கடந்த மாதம் 22ம் திகதி வடமாகாண சபையில் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்பட்டு சபையின் அங்கீகாரம் பெறப்பட்டிருந்தது. இந்நிலையில் மாகாண சபையின் தீர்வு திட்டத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்பந்தனிடம் கடந்த மாதம் 16ம் திகதி கையளிக்கப்படும் என தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் 3 உப குழுக்களாக பிரிந்து மேற்கொண்ட அரசியல் தீர்வு திட்டம் தயாரிப்பு பணிகளில், 3ம் குழுவின் வரைபுகள் முழுமைப்படுத்தப்படாமையினால் 30ம் திகதி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்மந்தனிடம் சமர்ப்பிக்கப்படும் என கடந்த மாதம் 12ம் திகதி நடை பெற்ற மாகாண சபை அமர்வில் மீள அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மே தின நிகழ்வுகளுக்காகவும், வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்டம் கையளிப்பு நிகழ்வுக்காகவும் இரா.சம்பந்தன் யாழ்.வந்திருந்தபோதும், 30ம் திகதி காலை மேற்படி கையளிப்பு நிகழ்வு அன்றைய தினம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது.
இதற்கு காரணம் முதலமைச்சர் சுகயீனம் காரணமாக கொழும்பில் நிற்பதாகவும் கூறப்பட்டிருந்தது. இதற்கு முன்னதாகவே கடந்த மா தம் 28ம் திகதியே மாகாண சபையின் வரைபு நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோரினால் கையளிக்கப்பட்டிருந்தது. எனவே எதிர்க்கட்சி தலைவரும், தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனிடம் முதலில் உத்தியோகபூர்வமாக கையளிப்பது என தீர் மானிக்கப்பட்டிருந்தமையினை மீறி நாடாளுமன்ற சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டமைக்கும்,
மேலும் மேற்படி கையளிப்பு தொடர்பாக அவை தலைவர் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படாமை தொடர்பாகவும் ஆளுங்கட்சிக்குள் சில குழப்பங்கள் தற்போது உருவாகியிருப்பதுடன், கடந்த காலங்களில் முதலமைச்சர் தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து கொண்டபோது முதலமைச்சருக்கு எதிரான அணி ஒன்று மாகாணசபைக்குள் செயற்பட்டமைக்கு ஒப்பான ஒரு நிலை மீள உருவாகலாம் எனவும் தகவல்கள் கசிந்திருக்கின்றன.
இந்நிலையில் மேற்படி அரசியல் தீர்வு திட்டம் நாடாளுமன்ற சபாநாயக ரிடம் சமர்ப்பிக்கப்பட்டமை தொடர்பாக தமக்கு எதுவும் தெரியாது. தமக்கு கூறப்படவில்லை எனவும் குறித்த கையளிப்பினால் மாகாண சபைக்குள் குழப்பம் உருவாகியிருப்பதாகவும் மாகாண சபை உறுப்பினர்கள் சிலரும் கூறியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.