Breaking News

கைதிகளின் மீது உடைந்துவிழும் தருவாயில் இலங்கையில் தடுப்பு முகாம்கள் : ஐ.நா



இலங்கையில் காணப்படும் தடுப்பு முகாம்கள், கைதிகளின் மேல் உடைந்துவிழும் தருவாயில் காணப்படுவதாக சித்திரவதைகள் மற்றும் கொடுமையான தண்டனைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் விசேட பிரதிநிதி, ஜூவான் ஈ மெண்டிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (சனிக்கிழமை) பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு, கண்டி மற்றும் பூசா சிறைச்சாலைகளுக்கு தாம் நேரில் சென்று பார்வையிட்டதாக குறிப்பிட்ட அவர், அங்குள்ள நிலைமைகளை தன்னால் வார்த்தைகளால் குறிப்பிட முடியாதென குறிப்பிட்டார். அங்குள்ள இடங்கள் மிகவும் பழைமை வாய்ந்ததாக காணப்படுவதோடு, இடவசதியின்றி கைதிகள் அல்லல்படுவதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை, சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் விடயம், இலங்கையில் சிறியதொரு விடயமாக கணக்கில் எடுக்கப்படுகின்றமை குறித்து தாம் வேதனையடைவதாகவும் தெரிவித்தார்.