65,000 வீட்டுத்திட்டத்தை உடனடியாக நிறுத்துங்கள்
வடக்கில் 65000 வீடமைப்புத் திட்டத்தை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும். அதற்கான தீர்மானத்தை ஜனாதிபதியும் பிரதமரும் எடுக்க வேண்டும் என நேற்று சபையில் எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி.எம்.பி.யுமான அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
பிரதமருக்கு வாகனங்கள் கொள்வனவுக்கு 6000 இலட்சம் ரூபாவை செலவழிக்கும் அரசு மக்கள் மீது வரிச்சுமைகளை அதிகரித்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற குறை நிரப்புக் பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அநுரகுமார திஸாநாயக்க இவ்வாறு தெரிவித்தார்.
சபையில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்
வடக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்காக 65000 வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இவ்வீடுகள் மக்கள் வாழ்வதற்கு உகந்த வீடுகள் அல்ல. அது தொடர்பில் மொறட்டுவை பல்கலைக்கழகம் ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதனை மாற்றியமைத்து சாதகமாக்கிக் கொள்வதற்காக பேராதனை பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
அம்மக்கள் வை பை, லெப்டொப் கேட்கவில்லை. மனிதர்கள் வாழ்வதற்கு வீடுகளையே கேட்கின்றனர். ஆனால் 5 வருட உத்தரவாதம் வழங்கி பைபர் வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன.
வடமாகாண முதலமைச்சரும் இதனை எதிர்த்துள்ளார். எனவே இவ்வீடமைப்பு திட்டத்தை கைவிட அரசு உடனடி தீர்மானத்தை எடுக்க வேண்டும். இதில் ஜனாதிபதியும் பிரதமரும் கவனம் செலுத்த வேண்டும்.
வற்வரி அதிகரிக்கப்பட்டதால் பொதுமக்களின் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள், உணவுப் பொருட்களுக்குமான விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால் பிரதமருக்கு இரண்டு வாகனங்கள் கொள்வனவு செய்வதற்காக 6000 இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது.
டிஜிட்டல் அமைச்சரின் உத்தியோகபூர்வ வாசல்தலத்தின் புனரமைப்புக்கு 42 இலட்சம் ரூபா செலவு செய்யப்படுகின்றது. இவ்வாறு செலவு செய்யும் அரசாங்கம் தேயிலை, இறப்பர் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தடுக்க எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேயிலை, இறப்பர் தொழிலில் ஈடுபட்டவர்களுக்கு எந்தவிதமான சலுகைகளும் இல்லை. கார்கில்ஸ் வங்கிகளின் கிளைகளை ஆரம்பிப்பதற்காக மத்திய வங்கியின் ஆளுநரின் மருமகன் தனது கம்பனியிலிருந்து மது உற்பத்திகளை கொள்வனவு செய்யுமாறு தெரிவித்துள்ளார்.
இவ்வாறு பழைய விளையாட்டையே இந்த அரசாங்கமும் ஆரம்பித்துள்ளது. கடந்த கால ஊழல் மோசடிக்காரர்களின் விசாரணைகளில் அவர்களை கைது செய்வதில் அரசியல் தலையீடுகள் தலைதூக்கியுள்ளன.
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.2 மில்லியன் கடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் அது தொடர்பில் அமைச்சரவைக்கும் தெரியாது. பாராளுமன்றத்திற்கும் தெரியாது.
மக்கள் மீதான வரிகள் அதிகரிக்கப்படும். மக்கள் நலன் புரிகள் ஒழிக்கப்படும் என்ற நிபந்தனைகளை ஏற்றுக் கொண்டே கடன் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது என்றார்.








