அடுத்துவரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு
அடுத்துவரும் சில நாட்களுக்குள் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் சுதந்திர ஊழியர்கள் சேவை சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கூட்டுத்தாபன தலைவரின் தான்தோன்றித்தனமான நடவடிக்கைகள் இந்த நிலைமைக்கு காரணமாகும் என அச்சங்கத்தின் தலைவர் பந்துல சமன் குமார தெரிவித்துள்ளார்.
தலைவரின் கையொப்பத்தில் புதிய விநியோகத்தர் பதிவு செய்யப்பட்டுள்ள போதிலும் கடந்த ஏப்றல் 22 ஆம் 23 ஆம் திகதிகளில் வந்து சேர வேண்டிய 92 ஆம் தர பெற்றோல் இதுவரை கூட்டுத்தாபனத்தை வந்தடையவில்லையெனவும் தலைவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்பொழுது 3 நாட்களுக்குரிய எரிபொருட்களே கையிருப்பில் உள்ளதாகவும், எதிர்வரும் 7 ஆம் திகதி எரிபொருள் கப்பலொன்று வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் குறித்த தினத்தில் வந்தடையாது போனால், எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படுவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.








