தமிழ் தலைவர்களை பார்த்து கொழும்பு அஞ்சுகிறதா?—யதீந்திரா
இராமகிருஸ்ண பரமஹம்சரின் குட்டிக் கதையொன்று இருக்கிறது. அதாவது, வீதியால் செல்லும் மக்களை எல்லாம் ஒரு பாம்பு துரத்திக் கொத்துகின்றது. பாம்பை எதிர்கொள்ள முடியாத மக்கள் ஒன்று திரண்டு அப்பகுதியிலுள்ள சுவாமியார் ஒருவரிடம் முறையிடுகின்றனர். உடனே அந்த சுவாமியார் அந்த பாம்மை அழைத்து, இனி இந்த மாதிரி செய்யக் கூடாது. செய்தால் சபித்துவிடுவேன் என்று எச்சரிக்கின்றார். இது நடந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் குறித்த சுவாமியார் அந்த வழியால் செல்லும் போது அந்த பாம்மை பார்க்க நேர்கிறது.
பாம்போ, எழும்ப முடியாமல் உருக்குலைந்துபோய் மோசமான நிலையில் இருந்தது. இதனை பார்த்த சுவாமியார், ஏன் இப்படி கேவலமாய் கிடக்கிறாய். உனக்கு என்ன நேர்ந்தது என்று வினவுகின்றார். எல்லாம் உங்களால்தான் வந்தது. உங்களின் கதையை கேட்டதால்தான் எனக்கு இந்த நிலைமை என்றது. அதற்கு அந்த சுவாமியார், நான் என்ன சொன்னேன் என்றார். நீங்கள்தானே ஒருவரையும் கொத்த வேண்டாம் என்று கூறினீர்கள்! அதற்கு சுவாமி, நான் உன்னை கொத்த வேண்டாம் என்று கூறியது உண்மை. ஆனால் சீற வேண்டாமென்று கூறினேனா? இல்லையே! நீ ஏன் சீறவில்லை. இந்த கதையின் பொருள், சீறும்வரைதான் பாம்பு. பாம்பு சீறுவதை மறந்த போது அது பாம்பு என்பதை மக்கள் மறந்துவிட்டனர். ஆளாளுக்கு பந்தாடிவிட்டனர். இதற்கும் தமிழர் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்று நீங்கள் யோசிக்கலாம். ஒரு முக்கிய தொடர்பு உண்டு. அது என்ன?
கடந்த சில நாட்களாக தென்னிலங்கை அரசியல்வாதிகள் பலரும், வடக்கு மாகாண சபையால் முன்வைக்கப்பட்ட தீர்வாலோசனையை பார்த்து மிரளுவதான ஒரு தோற்றத்தை காண்பித்து வருகின்றனர். பிரபாகரன் ஆயுதத்தால் அடையமுடியாமல் போனதை விக்கினேஸ்வரன் மாகாண சபையால் அடைய முயற்சிக்கிறார் என்று ஒரு சிலரும், விக்கினேஸ்வரன் மகிந்த தரப்பை பலப்படுத்த முயற்சிக்கிறார் என்று இன்னொரு சாராரும் கூறிவருகின்றனர். இதெல்லாம் உண்மைதானா? விக்கினேஸ்வரன் அமைதியாக இருந்தாலும் கூட, மகிந்த தரப்பினர் தங்களின் தீவிர நிலைப்பாட்டை கைவிடப் போவதில்லை. எனவே தமிழ் தரப்பு தங்களின் நிலைப்பாட்டை உரத்துச் சொன்னால் மகிந்த எழுந்துவிடுவார், பயன்படுத்திவிடுவார் என்பதெல்லாம் அர்த்தமற்ற வாதங்கள் என்பதே இப்பத்தியாளரின் அவதானம். மகிந்த ஒன்றை பயன்படுத்த மாட்டார் என்றால் அது ஒன்றேயொன்றுதான். அது – இது சிங்களவர்களுக்கு மட்டும் உரித்தான நாடு. நாங்கள் ஏதோ உண்டு, உறங்கி வாழ்ந்துவிட்டுப் போகிறோம். எங்கள் மக்களுக்கு வேறு எதுவும் தேவையில்லை. இந்த ஒரு வாதத்தை மட்டும்தான் மகிந்த பயன்படுத்த மாட்டார். மற்றைய எல்லாவற்றைமே அவரால் பயன்படுத்த முடியும். எனவே தமிழர்கள் தங்களின் கோரிக்கைகளை முன்வைத்தால் அதனை மகிந்த பயன்படுத்தி விடுவார் என்பது ஒரு அரசியல் ஏமாற்று நாடகத்தின் புதிய அத்தியாயமேயன்றி வேறில்லை. அப்படியே மகிந்த பயன்படுத்துவார் என்றாலும் கூட, அதனை எதிர்கொள்ள வேண்டியது நல்லாட்சி அரசாங்கத்தின் பொறுப்பேயன்றி, அது தமிழர் தரப்பினுடையதல்ல.
வடக்கு மாகாண சபையின் தீர்வாலோசனையின் கீழ் அப்படியென்ன அச்சுறுத்தல் இருக்கிறது? இதுவரை தமிழ் ஜனநாயக தலைமைகள் முன்வைத்துவந்த சமஸ்டிக் கோரிக்கையைத்தான் வடக்கு மாகாண சபையும் முன்மொழிந்திருக்கிறது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இணைக்கப்பட்டு அது ஒரு மொழிவாரி மாநிலமாக இருக்க வேண்டும் என்பது ஒரு தீவிரவாத கோரிக்கையல்ல. ஏனெனில் இதே கோரிக்கையைத்தான், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் அதற்கு முன்னர் இயங்கிய மிதவாத தலைமைகளும் தொடர்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன. இதனைத்தான் கொழும்பின் சிங்கள தலைமைகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்திருக்கின்றன. இப்போதும் எதிர்க்கின்றன. இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை ஆனால் இங்கு கவனிக்க வேண்டிய விடயமோ வேறு! அது எங்களைப் பற்றியது. உண்மையில் எங்களைப் பற்றித்தான் அதிகம் சிந்திக்க வேண்டியிருக்கிறதே தவிர சிங்களவர்களை பற்றியல்ல.
இப்போது நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட குட்டிக் கதைக்கும் தமிழர் அரசியலுக்குமுள்ள தொடர்பு என்வென்று பார்ப்போம். விடுதலைப் புலிகள் தமிழர் அரசியல் அரங்கிலிருந்து அகற்றப்பட்டு ஏழு வருடங்களாவிட்டன. இந்த ஏழு வருடங்களாக தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலுக்கு சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பு தலைமைதாங்கி வருகிறது. சம்பந்தன் தலைமை தாங்கிய குறித்த ஏழு வருடங்களும் கூட்டமைப்புக்குள் நிலவிய முரண்பாடுகள் பேசப்பட்ட அளவிற்கு, ஒருமித்த வேலைத்திட்டங்கள் பற்றி பேசப்பட்டதில்லை. சற்று ஆழமாக உற்று நோக்கினால், தற்போது வடக்கு மாகாண சபையினால் முன்வைக்கப்பட்டிருக்கும் குறித்த தீர்வாலோசனையும் மேற்படி கூட்டமைப்புக்குள் நிலவிய முரண்பாடுகளின் விளைவுகளில் ஒன்றுதான். சம்பந்தன் தமிழ் மக்களின் சார்பில் உறுதியானதொரு திட்ட முன்மொழிவை முன்வைக்கவில்லை என்னும் குற்றச்சாட்டை முன்வைத்துத்தான், தமிழ் மக்கள் பேரவை என்னும் அமைப்பு உருவாகியது. தமிழ் மக்கள் பேரவை, அரசியல் தீர்வுக்கான முன்மொழிவொன்றை தயாரிப்பதற்கான ஒழுங்குகளை மேற்கொண்டிருந்த நிலையில்தான், வடக்கு மாகாண சபையாலும் அவ்வாறானதொரு ஆலோசனையை முன்வைக்க வேண்டுமென்னும் அபிப்பிராயம் எழுந்தது.
உண்மையில் இந்த அபிப்பிராயம் தமிழ் மக்களின் நலனை முன்னிறுத்தி எழுவில்லை. மாறாக வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரன் தமிழ் மக்கள் பேரவையின் இணைத் தலைவராக இருக்கின்ற நிலையில், தமிழ் மக்கள் பேரவையினால் மட்டுமே ஒரு தீர்வு முன்வைக்கப்படுமாயின் எங்கு அது தங்களின் அரசியல் இருப்புக்கு குந்தமாகிவிடுமோ என்று அஞ்சிய ஒரு சிலரின் எண்ணத்திலிருந்து எழுந்ததுதான், மேற்படி எண்ணம். தமிழ் மக்கள் பேரவை ஒரு தீர்வுத் திட்ட நகலை முன்வைத்த போது, அது ஒரளவு ஊடங்களின் கவனிப்பை பெற்றிருந்தது. ஆனால் வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்டம் வெளியானதும் தமிழ் மக்கள் பேரவையின் தீர்வு ஆலோசனை பெருமளவிற்கு கவனிப்பாரற்ற ஒன்றாகிவிட்டது.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு தொடர்பில் கூட்டமைப்பு, பேரவை இறுதியாக வடக்கு மாகாண சபை – ஆகிய மூன்று தரப்பினரும் தமிழ் மக்கள் சார்பில் ஆலோசனைகளை முன்வைத்திருக்கின்றனர். ஏன் அனைவரும் இணைந்து ஓர் ஆலோசனையை முன்வைக்க முடியாமல் போனது? இது தொடர்பில் பேசியிருக்கும் சம்பந்தன், வடக்கு மாகாண சபை தங்களின் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு என்று தெரிவித்திருக்கின்றார். சம்பந்தன் சொல்லுவது போன்று அனைவருக்கும் உரிமை இருக்கிறது என்பது உண்மைதான். அவ்வாறாயின் சம்பந்தன் தலைமைப் பொறுப்பில் இருப்பதன் பொருள் என்ன?
கடந்த வாரம் கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பின் மாகாண சபை உறுப்பினர் ஒருவர் சம்பூர் அனல் மின்நிலையம் தொடாபில் தனிநபர் பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சியை மேற்கொண்டிருந்தார். ஆனால் அந்த பிரேரணை தொடர்பில் தங்களுக்கு ஒன்றும் தெரியாதென்று கூறி மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த உறுப்பினர்கள் எதிர்த்திருந்தனர். ஆனால் இது தொடர்பில் சம்பந்தனுக்கு எதுவும் தெரியாது. இதுதான் தமிழ் மக்களின் தலைமை! இந்த நிலையில் சம்பந்தன் கூறுவதை கொழும்பின் ஆட்சியாளர்கள் கருத்தில் கொள்வார்களா? சம்பந்தன் அவ்வப்போது நாங்கள் தமிழீழத்தை கோரவில்லை என்று மேசையில் அடித்துக் கொண்டிருக்கின்றார். இதனை சம்பந்தன் கூறித்தான் கொழும்பு தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. ஒரு அரசியல் கட்சியை அல்லது அரசியல் இயக்கத்தை பார்த்து அஞ்சினால் மட்டும்தான், அந்த அமைப்பு குறிப்பிடும் விடயத்தை ஆட்சியாளர்கள் பாரதூரமான ஒன்றாக கருதுவார்கள். மற்றும்படி அது கோடம்பாக்க நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் கருத்தக்கு ஒப்பான ஒன்றாகவே நோக்கப்படும்.
கடந்த ஆண்டு ஒரு மிதவாத தலைவர் போராட்டம் வெடிக்கப் போவதாக கூறினார். ஆனால் இன்னும்தான் அது வெடிக்கவில்லை. இப்படியான தலைவர்களை பார்த்து தெற்கு அச்சம் கொள்வதற்கு என்ன தேவையிருக்கிறது? பாம்பு சீற மறந்த போது, அது பாம்பு என்பதை மக்கள் எப்படி மக்கள் மறந்து போனார்களோ, அப்படித்தான் கடந்த ஏழு வருடங்களில் தமிழ் தலைமைகளின் செற்பாடுகளை உற்றுநோக்கும் போது, அது ஒரு வீரியமற்ற தலைமை என்பதை கொழும்பின் சிங்களை தலைமைகள் புரிந்துகொண்டுவிட்டன. இதன் காரணமாக கூட்டமைப்பையோ அல்லது வேறு எந்தவொரு தமிழ் தலைமையையோ பார்த்து கொழும்பு அச்சப்படவில்லை. கடந்த ஏழு வருடங்களில் கூட்டமைப்பால் கொத்தத்தான் முடியவில்லை, ஆனால் தாங்கள் ஒரு தரப்பு என்னும் நிலையில் சீறக் கூடி முடியவில்லையே!
ஒரு தலைமை வீரியமற்றது என்று ஆட்சியாளர்கள் கருதும் போது, அந்த தலைமை தொடர்பில் ஆட்சியாளர்கள் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும். ஆனாலும் அவர்கள் பதட்டமடைந்தது போன்று பேசுகின்றனர் – ஏன்? சிங்கள மக்கள் மத்தியில் தங்களின் வாக்கு வங்கியை பேணிப்பாதுகாப்பதற்கு அவ்வாறான பேச்சுக்கள் தேவை என்பதால். கொழும்மை எதிர்கொள்ள வேண்டுமாயின் முதலில் ஒரு தலைமை என்னும் தகுதிநிலையை அவர்கள் முன் நிரூபிக்கும் வகையில் கூட்டமைப்பு செயலாற்ற வேண்டும். அந்த தகுதிநிலை என்பது, சிங்கக் கொடியை உயர்த்துவதாலோ அல்லது சுதந்திர தினத்தில் பங்குகொள்வதாலோ வந்துவிடப் போவதில்லை.
—யதீந்திரா








