பாதுகாப்பு வலயங்கள் கொலைக் களங்களாகவே அமைந்தன
இறுதிக்கட்ட யுத்தத்தின்போது வன்னிப் பிரதேசத்தில் சர்வதேசத்தின் பங்களிப்புடன் பல பிரதேசங்கள் பாதுகாப்பு வலயங்களாக அறிவிக்கப்பட்ட போதிலும், அவை தமிழ் மக்களுக்கு கொலைக் களங்களாகவே அமைந்தன என, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற, ஆட்களை பதிவுசெய்தல் திருத்தச்சட்டம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.
எதுவும் அறியாத மக்கள் இலங்கை இராணுவத்தின் பொறிக் கிடங்குகளுக்குள் சிக்கவைக்கப்பட்டு, இறுதியில் கொத்துக்கொத்தாக கொல்லப்பட்டனர் என குறிப்பிட்ட அவர், பாதுகாப்பு வலயங்களை அறிவித்த அரசாங்கம் மக்களை காப்பாற்ற தவறிவிட்டதென குற்றஞ்சாட்டினார்.
அதேவேளை, சர்வதேசமும் மக்களை காப்பாற்ற தவறிவிட்டதென குறிப்பிட்ட சிவமோகன், வெறும் அறிக்கைகளாக மட்டுமே வந்த பாதுகாப்பு வலயங்கள், திட்டமிடப்பட்ட கொலைக்களங்காக மாற்றம் பெற்றன என இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் கிடைத்ததை மட்டுமே எடுத்துக்கொண்டு ஒடிய மக்கள், தமது பிறப்புச் சான்றிதழ், திருமண சான்றிதழ் உள்ளிட்ட ஏனைய ஆவணங்களை இழந்துவிட்ட நிலையில், புதிதாக வரும் சட்டமூலம் அவர்களுக்கு எவ்வாறு உதவப்போகின்றது என கேள்வியெழுப்பினார். அத்தோடு, இறுதிக்கட்ட யுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் பிறந்த பல குழந்தைகளுக்கு இன்னும் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கப்பெறாமல் உள்ளதென்பதையும் இதன்போது சிவமோகன் சுட்டிக்காட்டினார்.








