Breaking News

அரசாங்கத்திற்கு இன்று பலப்பரீட்சை : தோற்கடிக்கும் முயற்சியில் மஹிந்த அணி!



நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, இன்று (வியாழக்கிழமை) விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் இன்று காலை 9 மணிக்கு நாடாளுமன்றம் கூடவுள்ள நிலையில், குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, அதன் பின்னர் வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

அரசாங்கம் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் வரி அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக, பொது எதிரணியால் கடந்த மாதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, நேற்றைய தினம் விவாதத்திற்கு எடுத்துக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், நாடாளுமன்ற உள்ளக ஒலி கட்டமைப்பில் ஏற்பட்ட தொழிநுட்ப கோளாறு காரணமாக, சபை நடவடிக்கைகள் இன்று காலை வரை ஒத்திவைக்கப்பட்டது.

இன்றைய தினம், ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன நிதியமைச்சருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதோடு, மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஒன்றிணைந்த எதிரணி ஆகியன எதிராக வாக்களிப்பதற்கு தீர்மானித்துள்ளன. அத்தோடு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் நிதிமைச்சருக்கு ஆதரவு தெரிவிக்க தீர்மானித்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், குறித்த நம்பிக்கையில்லா பிரேரணையை தோற்கடிப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ஆதரவு அணியினர் கடும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் வெற்றிகொள்ள முடியுமென அரசாங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.