கூட்டு எதிர்க்கட்சியினரால் அரசாங்கத்தை கவிழ்க்க இயலாது-லக்ஸ்மன்
கூட்டு எதிர்க்கட்சியின் குற்றச்சாட்டுக்கள் வருத்தமளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவைத் தலைவர் பெருந்தெருக்கள் அமைச்சர் லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது குறித்து கருத்துரைத்த அவர்,
தற்போது நாடாளுமன்றின் சில இயந்திர சாதனங்கள் மோசமான நிலையில் காணப்படுவது அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு நன்றாகத் தெரியும். அது பற்றி தெரிந்து கொண்டும் சிலர் அரசாங்கம் சூழ்ச்சி செய்வதாக குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கின்றது.
குறைபாடுகள் காணப்படும் இயந்திர சாதனங்களுக்கு பதிலாக புதிய இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்ய திறைசேரியின் ஊடாக 125 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
புதிய இயந்திர சாதனங்களை கொள்வனவு செய்ய விலை மனு கோரப்பட்டுள்ளது.இவ்வாறான ஓர் நிலையில் கூட்டு எதிர்க்கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிறுபிள்ளைத் தனமாக குற்றம் சுமத்துவது வருத்தமளிக்கின்றது.
51 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கூட்டு எதிர்க்கட்சியினால் அரசாங்கத்தை கவிழ்க்க முடியாது.அரசாங்கம் இது குறித்து அச்சமடைய வேண்டிய அவசியம் எதுவும் கிடையாது என அவர் தெரிவித்துள்ளார்.