தமிழகத்தில் இருந்து மேலும் 35 அகதிகள் நாடு திரும்பவுள்ளனர்
இந்தியாவின் தமிழக அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் சிலர் மீண்டும் நாடு திரும்பவுள்ளனர். அகதிகளுக்கான ஐ.நா அமைப்பின் உயர் ஸ்தானிகர் அலுவலகத்தின் ஏற்பாட்டில் அவர்கள் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிஹின் லங்கா விமான நிறுவத்தின் இரு விமானங்களில் அவர்கள் சென்னையிலிருந்து இலங்கை திரும்பவுள்ளனர். அந்தக் குழுவில் 18 ஆண்களும் 17 பெண்களும் அடங்குவதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு கூறியுள்ளது.
அவர்கள் திருகோணமலை, மன்னார், மாத்தளை, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளில் மீண்டும் குடியேறவுள்ளனர்.
2011ம் ஆண்டு முதல் 4764 அகதிகள் இதுவரை நாடு திரும்பியுள்ளனர். இந்தியாவில் 109 முகாம்களில் சுமார் 64,000 அகதிகள் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.