மேலதிக வெடிபொருட்களை வெளிநாடுகளுக்கு விற்க சிறிலங்கா அரசாங்கம் முடிவு
இலங்கை படைகளின் தேவைக்கு அதிகமாக உள்ள வெடிபொருட்களை விற்பதற்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல இரத்நாயக்க தெரிவித்தார்.
பஹத்கம-ஹன்வெல்ல பிரதேச செயலகத்தில் நேற்று நடந்த கூட்டத்தின் பின்னர், செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
படையினரின் தேவைக்கு அதிகமாக உள்ள வெடிபொருட்களை வெளிநாடுகளுக்கு விற்கவும், காலாவதியான வெடிபொருட்களை அழிக்கவும், அரசாங்கம் முடிவு செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை,சலாவ இராணுவ முகாமுக்கு முன்பாக, செய்தியாளர்களிடம் இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் கிரிசாந்த டி சில்வா,
“பயன்படுத்தப்படாத- தேவைக்கதிகமாக உள்ள வெடிபொருட்களை வழங்குனரிடமே, திருப்பிக் கையளிக்க முடியும். இது அனைத்துலக நடைமுறை. எமக்குத் தேவையானதை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றைத் திருப்பிக் கொடுக்கலாம்.
நான் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், எம்மிடம் உள்ள மேலதிக வெடிபொருட்களை குறைக்க வேண்டியதன் தேவை குறித்து சிறிலங்கா அதிபரிடம் விளக்கமளித்தேன்.
அதனை உடனடியாகச் செய்வதற்கு அவர் அனுமதி அளித்திருந்தார். இங்குள்ள வெடிபொருட்களைக் குறைப்பதற்கான செயல்முறைகளை ஆரம்பித்திருந்தோம்.” என்றும் அவர் தெரிவித்தார்.