Breaking News

வடக்கில் உள்ள பத்திரிகைகளுக்கு பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு : குருகுலராஜா



வடபுலத்தில் உள்ள பத்திரிகைகளுக்கு பூரண எழுத்துச் சுதந்திரம் உண்டு என்றும், எவரும் எதனையும் எழுதலாம் என்றும் குறிப்பிடும் வட மாகாண கல்வி அமைச்சர் த.குருகுலராஜா, தேவை ஏற்பட்டால் பத்திரிகைகளை ஒப்பிட்டு பாருங்கள் என்றும் கூறினார்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு, கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் இடம்பெற்றபோது, அந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றும்போதே இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

”எங்களுடைய கல்வியின் நிலை தற்போது கீழே தள்ளப்பட்டுள்ளதாக சொல்கின்றார்கள். அதற்கு ஆதாரமாக புள்ளிவிபரங்களை காட்டுகின்றார்கள். ஒரு குடும்பத்தில் எட்டுப்பிள்ளைகள் இருந்தால் ஒருவர் கடைசிப்பிள்ளையாகத்தான் இருப்பார்.

நாட்டில் 98 வலயங்கள் இருந்தால் ஏதோவொரு வலயம் கடைசியாகத்தான் வரும். உசைன் போல்டுடன் நூறு மீற்றர் ஓடும் போது ஒருவர் கடைசியாக வருவார். அவர் கடைசியாக வருவது பிரச்சனை இல்லை. அவர் கடைசியாக எவ்வளவு தூரம் பின்னுக்கு வருகின்றார் என்பதனை பார்த்துத்தான் பேசவேண்டும்.

எனவே பல அரசியல்வாதிகள் இதனைப்பற்றி பேசுகின்றார்கள். எல்லோரும் பேசுகின்றார்கள். எனது அரசியல் வாழ்க்கையில் 3 முக்கிய விடயங்களை கற்றுக்கொண்டுள்ளேன். எல்லோரும் இந் நாட்டு மன்னர்கள். வடக்கில் அவ்வாறுதான் சொல்கின்றார்கள். கிழக்கில் எப்படியென்று தெரியவில்லை.

உலகில் உள்ள பிரதேசங்களிலேயே வட புலத்திலே தான் பத்திரிகைகளுக்கு பூரண சுதந்திரம் உண்டு. நீங்கள் விரும்பினால் ஒப்பிட்டும் பார்க்கலாம். என்னவேண்டும் என்றாலும் பத்திரிகையில் எவரும் எழுதலாம். எந்த செய்திகளையும் போடலாம்.

‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ வடக்கில் அதைத்தான் கடைப்பிடிக்கின்றார்கள். எல்லாம் எங்களுடைய ஊர். நான்தான் தனிக்காட்டுராஜா என்கின்றனர். தங்களுடைய சொற்களையெல்லாம் கேட்கவேண்டும் என்கின்றனர்.

இவ்வாறான அடிப்படையில் அரசியல் செய்வது மிக கஷ்டமானது. தந்திரோபாயமாகத்தான் சிலவற்றை செய்துகொள்ளவேண்டும். இவ்வாறான நிலையில்தான் வடபுலத்தின் கல்வியைப்பற்றியும் பேசிக்கொள்கின்றார்கள்.” என்றும் கூறினார்.