Breaking News

எமது குடும்பங்களுடன் இணைந்து வாழவேண்டும் : ஈழ அகதிகள்



தமிழகம் – திருச்சி சிறப்பு தடுப்பு முகாமில் உள்ள நான்கு ஈழ அகதிகளின் சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாக தொடர்கின்றது.

தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ அனுமதிக்குமாறு கோரி, குறித்த அகதிகள் கடந்தபுதன்கிழமை இந்தப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக வந்த ஈழத் தமிழர்களில் அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட வழக்கிலும்,தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான வழக்கிலும் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பின்னர், இவர்களை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்தது.

எனினும், சிறை வாசலில் வைத்து மீண்டும் கைதுசெய்யப்பட்டு சிறப்பு முகாம் எனும் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், குடும்பத்தில் இருந்தும் தனிமைப்படுத்தி கடந்த சில வருடங்களாக அடைக்கப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக தங்களை நம்பியிருக்கும் குடும்ப உறுப்பினர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ஈழ அகதிகள், தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் விடுத்துள்ளனர்.

எனினும் தமது போராட்டத்திற்கு இதுவரை பதில் கிடைக்கவில்லை எனவும், பதில் கிடைக்கும் வரை போராட்டம் தொடரும் எனவும் குறித்த ஈழ அகதிகள் தெரிவிக்கின்றனர்.

ஸ்ரீ சுவராஜா, செந்தில்குமார், பிரதீபன், சந்திரன் ஆகியோரே இவ்வாறு சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.