Breaking News

வடக்கு, கிழக்கில் அதிக இராணுவப் பிரசன்னம் – ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

சிறிலங்காவின் வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரச்சனம் இருப்பதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹசேன் தெரிவித்துள்ளார்.


ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத்தொடரில் சிறிலங்காவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடர்பாக- நேற்று பிற்பகல் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன், வாய்மூல அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.

அந்த அறிக்கையில் தாம் சிறிலங்காவுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது, வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் இருப்பதையும், அதனால் பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளையும் கண்டறிந்ததாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஜெனிவா தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது மாதங்கள் கழிந்துள்ள நிலையிலும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படாதுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் சட்டத்தின் கீழ் இன்னமும் ஆட்கள் கைது செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

பாதிக்கப்பட்டவர்கள், சிறுபான்மை சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் வகையில் சிறிலங்கா அரசாங்கம் வேகமான நகர்வுகளை முன்னெடுக்கவில்லை என்றும், அவர் சுட்டிக்காட்டினார்.

பொறுப்புக்கூறல் பொறிமுறையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியமானது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வலியுறுத்தினார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையின் முற்கூட்டிய பிரதி ஏற்கனவே, வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.