சபையில் யாழ்ப்பாண பல்கலைக்கழக விவகாரம்
யாழப்பாணப் பல்கலைகக்கழத்தில் மாணவர் குழுக்களிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் இடம்பெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்ததன் பின்னரே அது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி பேச முடியும் என்று நேற்று வியாழக்கிழமை சபையில் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இந்த சம்பவத்தின் போது சுமுகமான நிலைமையை ஏற்படுத்த உதவிய அனைவருக்கும் நன்றிகளையும் வெளியிட்டார்.
'இந்த பிரச்சினை பற்றி நடைபெறும் விசாரணைகளின் அறிக்கைகள் கிடைத்ததும் அது தொடர்பான அடுத்த நடவடிக்கை பற்றி பேச முடியும். இந்த சம்பவம் இடம்பெற்றதும், அநுரகுமார திஸாநாயக்க எம்.பி என்னிடம் பேசினார். மாவை சேனாதிராஜா எம்.பி, உயர்கல்வி அமைச்சர், சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர், அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் உள்ளிட்டோருடன் நான் பேசியிருந்தேன். இந்த சம்பவம் பற்றி சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் ஊடகங்களுடனும் பொலிஸாருடனும் பேசியிருந்தார்.
என்னை பொறுத்தவரையில் இந்த சம்பவமானது சனிக்கிழமை மாலையாகும் போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருந்தது. அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் நன்றிகள். இந்த சபையிலுள்ள பெரும்பாலானோர் அன்று அமைதியை ஏற்படுத்த கோரியிருந்தனர். அன்றைய தினம் இந்த நாட்டிலுள்ள யாரும் இனவாதத்தின் நிமித்தம் செயற்பட்டிருக்கவில்லை. அதற்கு அனைவருக்கும் நன்றி' என்று ரணில் விக்கிரமசிங்க இதன்போது மேலும் தெரிவித்தார்.