Breaking News

சம்பந்தன் சபையில் சீற்றம்!

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற தமிழ் சிங்கள மாணவர்களுக்கிடையிலான மோதல் சம்பவம் போன்று ஏனைய பல்கலைக்கழகங்க ளிலும் சில சம்பவங்கள் இடம்பெறுகின்றன. 

அவற்றின் பின்னணியில் அரசியல் நோக்கம் இருக்குமாயின் அவற்றுக்கு தீர்வு வழங்குவது தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் சபையில் கோரிக்கை விடுத்தார்.

யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்ட கோரிக்கையை விடுத்தார்.


அவர் தொடர்ந்தும் கருத்து வெளியிடுகையில்,

பல்கலைக்கழகத்திற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வில் புரிந்துணர்வின்மை காரணமாக ஏற்பட்ட மோதலானது துரதிஸ்டவசமான சம்பவமொன்றாகும். அவ்வாறான புரிந்துணர்வின்மைகளை தவிர்த்துக் கொள்வதில் அனைவரும் உறுதியுடன் செயற்பட வேண்டும். எவ்வாறிருப்பினும், அந்த நிலைமையானது மிகவும் துரிதமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விட்டது. அதற்காக சகல மாணவர்களும் பல்கலைக்கழக அதிகாரிகளும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தனர்.

இத்தகைய மோதல் சம்பவங்கள் தொடர்வதற்கு இடமளிக்கக்கூடாது. அது எமது கடமையாகும். பல்கலைக்கழகம் மீண்டும் விரைந்து திறக்கப்பட்டு கல்வி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகள் ஏற்கனவே எடுக்கப்பட்டு வருகின்றன. பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளன. சம்பவம் பற்றிய விசாரணைகள்; மேற்கொள்ளப்படுவதுடன், விசாரரணைகள் நிறைவடைந்ததும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இதுபோன்ற விடயங்களை தவிர்த்துக் கொள்வதில் நாம் கவனத்துடன் நடந்து கொள்ள வேண்டும். ஏனைய பல்கலைக்கழகங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் எதையும் நான் குறிப்பிட்டு கூற விரும்பவில்லை. எனினும். அந்த சம்பவங்கள் பற்றியும் கவனத்தில் கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.