Breaking News

மஹிந்த அணியின் உண்மை முகத்தை வெளிப்படுத்தும் பாதயாத்திரை



பாத யாத்திரை மூலம் ஆட்சியைக் கவிழ்க்க முடியும் என்ற மாயை​யை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையில் கண்டியிலிருந்து கொழும்புக்கு இன்று பாதயாத்திரை ஆரம்பிக்கப்ப டுகின்றது.

அதனை அடிப்படையாகக் கொண்டு தான் வரி அதிகரிப்பு, யுத்த நீதிமன்றம் அமைக்கப்படுதல், பிரிவினைக்கு துணை போகும் அரசியலமைப்பைத் திருத்தும் நடவடிக்கை, உள்ளூராட்சித் தேர்தல் ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்களைத் தமக்கு சாதகமான விடயங்களாக மஹிந்த அணியினர் கையில் எடுத்துள்ளனர்.

ஆனால் இவர்கள் கையில் எடுத்துள்ள விடயங்களை மக்கள் புரிந்து கொள்ளாதவர்கள் அல்லர்.

நாட்டில் ஜனநாயகக் கட்டமைப்பை நல்லாட்சி அரசாங்கம் வலுப்படுத்தியதன் பயனாகத்தான் மஹிந்த அணியினர் இப்பாத யாத்திரையை இவ்வாறு நடத்துகின்றனர்.

ஆனால் கடந்த ஆட்சிக் காலத்தில் வெள்ளை வான் கலாசாரத்தைப் பயன்படுத்தி மக்களின் ஜனநாயகப் போராட்டங்கள் அடக்கப்பட்டும் கட்டுப்படுத்தப்பட்டும் வந்தன. அதனை மக்கள் இன்னும் மறந்து விடவில்லை.

ஆனால் அப்படியான நிலைமை இப்போது இல்லை. அந்த கறைபடிந்த யுகத்திற்கு நல்லாட்சி அரசாங்கம்தான் முற்றுப்புள்ளி வைத்தது.

இன்று மக்கள் அச்சம் பீதியின்றி சுதந்திரமாகச் செயற்படக் கூடிய சூழல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.

இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி நல்லாட்சி அரசாங்கத்தை கவிழ்க்கும் முயற்சியில் மஹிந்த அணியினர் ஈடுபட்டுள்ளனர்.

அதேநேரம் இவர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை ஒட்டுமொத்தமாக எடுத்துப் பார்த்தால் அவை அனைத்தும் நல்லாட்சி அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள காழ்ப்புணர்வுகளின் வெளிப்பாடுகள் என்பதை எவருமே இலகுவில் புரிந்து கொள்வர்.

மேலும் இக்குற்றச்சாட்டுகளின் பின்புலங்களை எடுத்துப் பார்த்தால் அவை கடந்த ஆட்சிக் காலத்தின் பிழையான நடவடிக்கைகளினதும், தவறான அணுகுமுறைகளினதும் விளைவுகள்.

கடந்த ஆட்சிக் காலத்தில் இந்நாடு ஒரு குடும்பத்தின் சொத்தாகவே பயன்படுத்தப்பட்டது, அதனால் தாம் நினைத்ததே சட்டம், அதுவே வேலைத் திட்டம் என்றபடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

விரும்பிய நேரத்தில், விரும்பியபடி கடன்கள் பெறப்பட்டன. இதன் போது வட்டி வீதம் குறித்து சிறிதளவேனும் கவனம் செலுத்தப்படவில்லை.

இதன் விளைவாக கடந்த ஆட்சிக் காலத்தில் பெறப்பட்ட கடன்களைத் திருப்பி செலுத்த வேண்டிய நிலைமைக்கு தற்போதைய அரசாங்கம் முகம் கொடுத்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் 2015 ம் ஆண்டு ஜனவரி மாதம் 11 வீதமாகக் காணப்பட்ட பெறுமதிசேர் வரியை (வற்) 4 வீதத்தினால் அதிகரித்து 15 வீதமாக்கியது நல்லாட்சி அரசாங்கம்.

இதனையே மஹிந்த அணியினர் பாரிய வரிச் சுமையாகக் காண்பிக்க முயற்சி செய்கின்றனர்.

ஆனால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் ஆட்சிக் காலத்தில் அதாவது 2007ல் இவ்வரி 20 வீதமாக அதிகரிக்கப்பட்டிருந்தது. இதனை அவர்கள் வசதியாக மறந்து விட்டுத்தான் இப்போது வரிச் சுமை என்கின்றனர்.

அத்தோடு கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட தன்னிச்சையான செயற்பாடுகளால் சர்வதேசமும் இலங்கை மீது நல்லண்ணம் கொண்டிருக்கவில்லை.

இவ்வாறான சூழலில் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற நல்லாட்சி அரசாங்கம், சர்வதேச நகர்வுகளுக்கு ஏற்ப அணுகுமுறைகளைக் கையாண்டு கடந்த ஆட்சியாளர்களால் எற்படுத்தப்பட்டிருந்த அபகீர்த்தியையும், கரும் புள்ளிகளையும் களைந்து வருகின்றது.

ஆனால் நாட்டினதும் நாட்டு மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு இவ்வரசாங்கம் முன்னெடுத்து வரும் வேலைத் திட்டங்களைக் குழப்பி விடுவதற்கு அவர்கள் முயற்சி செய்கின்றனர்.

அதற்கான சிறந்த துரும்பு யுத்த நீதிமன்றம் எனக் கருதுகின்றனர்.

இதேவேளை தற்போது நடைமுறையில் இருக்கும் அரசியலமைப்பானது இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன்னர் இந்நாட்டுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்று.

இக்காலப் பகுதியில் நாட்டிலும் மக்கள் மத்தியிலும் எவ்வளவோ மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு விட்டன.

அதேநேரம் இந்த யாப்பும் இதற்கு முன்னர் 1972 ல் அறிமுகப்படுத்தப்பட்ட யாப்பும் நாட்டில் சகவாழ்வும், நல்லிணக்கமும் பாதிக்கப்படப் பெரிதும் உதவியுள்ளன. அந்நிலைமை இனியும் தொடர முடியாது.

எல்லா மக்களும் இந்நாட்டு பிரஜைகள் என்ற அடிப்படையில் வாழ்வதற்கு ஏற்றதும், சகலரும் ஏற்றுக் கொள்ளக் கூடியதும், நாட்டுக்குப் பொருத்தமானதுமான அரசியலமைப்பை உருவாக்கவே நல்லாட்சி அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.

இதனையே மஹிந்த அணியினர் பிரிவினைக்கு துணை போகும் நடவடிக்கை என்கின்றனர்.

ஆனால் நல்லாட்சி அரசாங்கத்தின் வேலைத் திட்டங்கள் குறித்து மக்கள் தெளிவாகவே உள்ளனர்.

அதனால் நாட்டினதும் மக்களினதும் நலன்களைக் கருத்தில் கொண்டு நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் வேலைத் திட்டங்களை பிழையாகவும், தவறாகவும் கொண்டு செல்ல மஹிந்த அணியினர் மேற்கொள்ளும் முயற்சிகள் மக்கள் மத்தியில் எடுபடப் போவதில்லை.

ஆனால் மஹிந்த அணியினரின் உண்மை முகத்தை நாட்டு மக்கள் மற்றொரு தரம் அறிந்து கொள்ள இப்பாதயாத்திரை வழிவகுக்கும் என்பது உறுதியானது.