அரசாங்கம் பயந்துவிட்டது : நாமல்
ஒன்றிணைந்த எதிரணியின் பாத யாத்திரையைக் கண்டு அரசாங்கம் அஞ்சிவிட்டதென, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கண்டியின் புறநகர் பகுதியான கெட்டம்பே எனும் இடத்தில், இன்று (வியாழக்கிழமை) காலை ஆரம்பமான பாத யாத்திரையில் கலந்துகொண்டுள்ள நாமல் இவ்வாறு குறிப்பிட்டார். நாமல் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”இன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் ஐக்கிய தேசிய கட்சியினர், உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை இங்கு ஆரம்பித்துள்ளனர். இதற்கென அவர்கள் ஒரு தேர்தலை நடத்தியிருக்கலாம். அதனை விடுத்து நாம் இன்று பாதைக்கு இறங்கிய பின்னர், இன்றைய தினம் உறுப்பினர் ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை இப்பிரதேசத்திலேயே முன்னெடுக்கின்றனர்.
உறுப்பினர்களை ஊக்குவிப்பதற்கு முன்னர், மக்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த நிவாரணங்களையும் வேலைவாய்ப்புகளையும் வழங்கவேண்டும். நாட்டை இரண்டாக பிளவுபடுத்தாமல், சர்வதேசம் எமது நாட்டு விடயங்களில் தலையிடாத வகையில் செயற்பட வேண்டும். விவசாயிகளுக்கு உர மானியத்தை வழங்க வேண்டும். எட்கா போன்ற நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் உடன்படிக்கைகளை மேற்கொள்வதை நிறுத்த வேண்டும்.
மக்களது தேவைகளை பூர்த்திசெய்து கொடுக்கும் வகையில், மக்கள் ஆட்சியொன்றை நிறுவுவதற்கு இன்று நாம் வீதிக்கு இறங்கியுள்ளோம். இதற்கு எவ்வாறான தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் மக்களுக்கான எமது பேரணியை தடுத்து நிறுத்த முடியாது” என்றார்.








