Breaking News

இலங்கையின் புதிய வெளிவிவகாரச் செயலராக நாளை பதவியேற்கிறார் எசல வீரக்கோன்

சிறிலங்காவின் புதிய  வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நாளை பதவியேற்கவுள்ளார். புதுடெல்லியில் சிறிலங்காவுக்கான தூதுவராக கடந்த எட்டு மாதங்களாகப் பணியாற்றிய எசல வீரக்கோன், புதிய பதவியை ஏற்றுக் கொள்வதற்காக நேற்றிரவு புதுடெல்லியில் இருந்து கொழும்பு திரும்பினார்.


சிறிலங்கா வெளிவிவகாரச் செயலராகப் பணியாற்றும் சித்ராங்கனி வகீஸ்வராவின் பதவிக்காலம் இன்றுடன் முடியவுள்ள நிலையிலேயே, புதிய வெளிவிவகாரச் செயலராக எசல வீரக்கோன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவுக்கான சிறிலங்கா தூதுவர் பதவியில் இருந்து விலகிச் செல்லும் எசல வீரக்கோனுக்கு இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்ஜெய்சங்கர் கடந்த வெள்ளிக்கிழமை இரவு ஹைதராபாத் இல்லத்தில் இராப்போசன விருந்து அளித்தார்.

இதன்போது, சிறிலங்காவுக்குத் தேவையான எந்த உதவியையும் இந்தியா வழங்கத் தயாராக இருப்பதாகவும், தம்முடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறும் இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே சிறிலங்கா வெளிவிவகாரச் செயலர் பதவியில் இருந்து இன்றுடன் ஓய்வுபெறவுள்ள சித்ராங்கனி வகீஸ்வரா புதுடெல்லிக்கான தூதுவராக விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.