நான் இனவாதியல்லன்! சீறுகிறார் வடக்கு ஆளுநர்
இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த செயற்படும் என் மீது இனவாத சாயத்தைப் பூசும் வகையில் எனது கருத்துகள் திரிவுபடுத்த ப்படுகின்றன. நான் இனவாதியல்லன். நல்லிண க்கவாதியே. இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்தார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள வடக்கு மாகாண ஆளுரின் காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை பல்லின, மத, காலாசாரம், மொழிகளைக் கொண்ட ஒரு நாடு. இந்த நாட்டில் மூன்று தசாப்த காலமாக இடம்பெற்ற யுத்தம் காரணமாக இரத்த ஆறு ஓடியது. அந்தக் கசப்பான அனுபவங்கள் மறக்கப்பட சமாதானமும், நல்லிணக்கமும் கட்டியெழுப்பப்படும் சந்தர்ப்பம் தற்போது கிடைத்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை அரசால் மாத்திரம் ஏற்படுத்திவிட முடியாது. நல்லிணகத்தை ஏற்படுத்த மதகுருமார் முதல் நாட்டில் வாழும் அடிப்படை பிரஜை வரை அனைவரும் கைகோர்க்க வேண்டும். இந்த நாட்டில் வாழும் தமிழ், முஸ்லிம்சிங்கள மக்கள் சுதந்திரமாக வாழ்வதே நல்லிணக்கம். அதனையே அரசு செய்ய முயற்சிக்கின்றது. நான் ஒருபோதும் நல்லிணக்கத்திற்கு எதிரானவன் அல்லன். 13ஆவது திருத்தச் சட்டம் கொண்டுவரப்பட்டபோதும் மற்றும் பல சந்தர்ப்பங்களின்போதும் என் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
தற்போது நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பொறுப்பில் ஊடகங்களுக்குப் பாரிய பங்கு உண்டு. இன்று சமூகத்தில் விதைக்கப்படும் கருத்துக்கள் பெரும்பாலும் ஊடகங்களில் கொண்டுசெல்லப்படுபவையாகும். நல்லிணக்கம் ஏற்படுமாயின் மீண்டும் இந்த நாட்டில் யுத்தமொன்று ஏற்படாது. ஊடகங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் தெற்கிலும், வடக்கிலும் வேறுப்பட்டவையாக உள்ளன. தெற்கில் உள்ள பத்திரிகைகள் சிங்களவர்களைத் தூண்டுகின்றன.
வடக்கிலுள்ள பத்திரிகைகள் தமிழ் மக்களைத் தூண்டுகின்றன. ஆனால், அதுவல்ல உண்மை. செய்திக்குப் பதிலாக எழுதுபவர்களின் அபிப்பிராயங்களே அதிகம் உள்ளன. குறிப்பாக யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற சம்பத்திற்கு சிங்கள மாணவர்களைத் தூண்டியது நான் எனச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் எனக்கு எதுவுமே தெரியாது. இவ்வாறான கருத்துக்கள் இனவாதத்தை மீண்டும் தூண்டும். நயினாதீவில் புத்தர் சிலையை உருவாக்குவதும் நான் என்கின்றனர். எனக்கும் அதுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இவ்வாறு பொய்யான செய்திகள் வெளியிடப்படுவதால் என்னைப் பற்றிய தப்பான அபிப்பிராயங்கள் தமிழர்கள் மத்தியில் தோற்றுவிக்கப்படும் என்பதுடன், என்னை இனவாதியாகப் பார்ப்பார்கள். யாழ். பல்கலைக்கழகப் பிரச்சினையை தமிழ் மாணவர்கள்தான் ஆரம்பித்தனர் என நான் கூறியதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுடிருந்தன.
அவ்வாறு நான் சொல்லவில்லை. யார் செய்தாலும் தவறு தவறுதான் என்றுதான் தெரிவித்தேன். நான் ஒருபோதும் இனவாத அரசியல் செய்பவன் அல்லன். ஊடகங்கள் பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும். நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான காலம் இது என்றார்








