வடக்கின் பிரதிநிதித்துவமற்ற மீள்குடியேற்றச் செயற்பாட்டிற்கு கூட்டமைப்பு கண்டனம்
தமிழ் தேசிய கூட்டமைப்பின் வடக்கு பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் என எவருமே உள்வாங்கப்படாது அமைக்கப்பட்டுள்ள மீள்குடி யேற்ற செயலணியை உடன் வாபஸ் பெறவே ண்டும். எமது விருப்பமின்றி முன்னெடுக்கும் மீள்குடியேற்றச் செயற்பாடுகளை தாம் வன்மையாக கண்டிப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் பொருளாதார நெருக்கடி மற்றும் அரசாங்கத்தின் மறைமுக அடக்குமுறைகள் குறித்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், வடக்கின் மீள்குடியேற்றம் தொடர்பாக அமைச்சர்களான டி.எம்.சுவாமிநாதன், ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் அடங்கிய செயலணியொன்று அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ளது.
வடக்கின் மீள்குடியேற்றம் தெடர்பாக அமைக்கப்படும் செயலணியில் வடக்கு மக்களின் ஆணை பெற்ற வடமாகான சபை முதலமைச்சர் உள்வாங்கப்படவில்லை. வடக்கின் பெரும்பான்மை பலம் கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் உள்வாங்கப்படவில்லை. இது எந்த வகையில் நியாயமாகும்.
வடக்கில் நடைபெறும் ஒரு விடயத்திற்கு அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்களை புறந்தள்ளி தீர்மானம் எடுப்பதுதான் நல்லாட்சியா? நல்லிணக்கமா? வடக்கு மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பாக அரசாங்கத்தின் மூன்று அமைச்சர்கள் அடங்கிய செயலணியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்போ வடமாகாண சபையோ அல்லது வடக்குக்கான மக்களோ ஏற்றுக்கொள்ளவில்லை.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வடக்கு பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் என எவருமே உள்வாங்கப்படாது அமைக்கப்பட்டுள்ள இந்த மீள்குடியேற்ற செயலணியை உடன் வாபஸ் பெறவேண்டும் எனவும் கூட்டமைப்பின் சார்பில் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.








