Breaking News

நல்லாட்சி அரசாங்கத்தை வெளியேற்றும் காலம் நெருங்கியுள்ளது

ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி – ரணில் அரசாங்கத்தை ஆட்சியிலிருந்து வெளியேற்ற வேண்டிய காலம் வந்துவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.


அதேவேளை அதற்காக நாட்டின் சொத்துக்களை கொள்ளையடித்த ராஜபக்ச குடும்பத்தின் உறுப்பினர்கள் எவரும் தலைமை வகிக்கும் தரப்புக்கு மீண்டும் ஆட்சியமைக்க இடமளிக்கக்கூடாது என்றும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ள ஜே.வி.பி யின் தலைவர், முற்போக்கு சக்திகளை இணைத்துக் கொண்டு ஜே.வி.பி புதிய அரசாங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசியல் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் தொடர் பொதுக் கூட்டத்தின் ஒரு அங்கமாக கொழும்பை அண்மித்த மொறட்டுவ பகுதியில் நேற்றைய தினம் இரவு நடைபெற்ற கூட்டத்திலேயே அநுர குமார திஸாநாயக்க இந்தக் கருத்தை தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில் ”ஒன்றரை வருட காலம் என்பது எந்தவொரு அரசாங்கத்தினதும் நல்லது, கெட்டது மற்றும் எங்கே செல்கின்றது என்பதை மதிப்பதற்கு போதுமான காலப்பகுதியாகும்.

இதற்கமைய இந்த அரசாங்கம் கடந்த ஒன்றரை வருடங்களாக மேற்கொண்ட நடவடிக்கைகளை பார்க்கும் போது இந்த அரசாங்கம் நல்ல திசையை நோக்கி பயணிக்க வில்லை என்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிபீடம் ஏறினால் நாட்டின் பொருளாதாரம் சிறப்பாக இருக்கும் என்ற ஒரு கருதுகோல் இருக்கின்றது. எனினும் இது மாயை என்பது தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக தாம் ஆட்சி பீடம் ஏறினால் மக்களின் பக்கட்டுகளை பணத்தால் நிரப்புவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரான பிரதமர் உறுதியளித்தார். தற்போது பக்கட் பைகள் நிரம்பியிருக்கின்றதா?. ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் பத்து இலட்சம் பேருக்கு தொழில் வழங்குவதாக உறுதியளித்தனர். அப்படியானால் இன்னும் ஒன்பது லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பை வழங்குவோம் என்றுதானே கூற வேண்டும். ஆனால் இன்றும் பத்து லட்சம் பேருக்கு தொழில் என்றே இந்த அரசாங்கம் கூறிவருகின்றது.  

அதேபோல் நாட்டு பாரிய ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய உடன்படிக்கையொன்றை இந்தியாவுடன் ஏற்படுத்திக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அது மாத்திரமன்றி சர்வதேச நாணய நிதியத்துடன் அனைத்து நலன்புரி நடவடிக்கைகளையும் இரத்துச் செய்யும் வகையில் மிகவும் மோசமான நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடன்களை பெறவும் திட்டமிட்டுள்ளது.

இவை மாத்திரமன்றி இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அரச சேவையில் இணையும் அரச ஊழியர்களின் ஓய்வூதியத்தை அரசாங்கம் இரத்துச் செய்திருக்கின்றது. உர மானியத்தை அகற்றிக்கொண்டுள்ளது. பாடசாலை சீருடைகளை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருகின்றது. மேலதிகமான மக்கள் மீது வற் வரியை திணித்துள்ளது.

இதற்கமைய இந்த ஒன்றரை ஆண்டுகளுக்குள் பிரதான இரு அரசியல் கட்சிகளும் இணைந்து அமைத்த தேசிய நல்லாட்சி அரசாங்கத்தின் செயல்கள்தான் இவை.

அதனால் தொடர்ந்தும் இந்த நல்லாட்சி அரசாங்கத்திற்கு ஆட்சியை கொண்டுநடாத்த இடமளிக்கக்கூடாது. அதனால் மாற்று அரசாங்கமொன்றை கட்டியெழுப்ப வேண்டிய தேவை எமக்கு எழுந்துள்ளது. ஆனால் அந்த அரசாங்கம் யார் என்பதை நாம் தெளிவாக தீர்மானிக்க வேண்டும்.

ஏனெனில் மீண்டும் மஹிந்த மற்றும் அவரது சகாக்கள் அடங்கிய கொள்ளைகார அரசாங்கமா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும். அரச சொத்துக்களை சூறையாடிய குடும்பமே மஹிந்த ராஜபக்ச குடும்பம். அதனால் அந்த குடும்பத்திலிருக்கும் எவருக்கும் ஆட்சியை கைப்பற்ற இடமளிக்க முடியாது. அதனால் மக்கள் விடுதலை முன்னணியும், முற்போக்கு சக்திகளும் இணைந்து நாட்டில் ஆட்சியை ஏற்படுத்த வேண்டியது அவசியமாகவுள்ளது என்றார்.