மனித உரிமை குற்றச்சாட்டுகளை வெற்றிகரமாகத் தோற்கடித்தேன் – மார்தட்டுகிறார் மைத்திரி
ஜனாதிபதி தேர்தலில் தாம் மகிந்த ராஜபக்சவை மட்டும் தோற்கடிக்கவில்லை என்றும், ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாகத் தோற்கடித்ததாகவும் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.
கேகாலையில் நேற்று நடந்த தர்மசிறி சேனநாயக்க நினைவு நிகழ்வில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“கடந்த ஆண்டு தொடக்கத்தில், ஜனாதிபதி தேர்தலை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முன்கூட்டியே நடத்தியதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தன.
அதில் ஒன்று, 2015 மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் பணியகத்தின் விசாரணை அறிக்கையாகும்.
ஜனாதிபதி தேர்தலில் மகிந்த ராஜபக்சவை மட்டும் நான் தோற்கடிக்கவில்லை. ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொண்ட குற்றச்சாட்டுகளையும் வெற்றிகரமாகத் தோற்கடித்தேன்.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் சமர்ப்பிக்கப்படவிருந்த ஐ.நா விசாரணை அறிக்கையை செப்ரெம்பர் மாதத்துக்கு பிற்போடச் செய்தோம்.
புதிய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் மீது அனைத்துலக சமூகம் திருப்தி கொண்டது.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.