யாழ்.பல்லைக்கழகத்தை பாதுகாக்க பழைய மாணவர்களின் கட்டமைப்பு அவசியம்!
யாழ் பல்கலைக்கழகத்தின் நிர்வாக பலவீனங்களை சரிசெய்து அதனை சரியான பாதையில் கொண்டு செல்வதற்கு பல்கலைகழகத்தின் பழைய மாணவர்களின் ஒன்றிணைந்த கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் இவ்வாறு யாழ். பல்கலைக்கழககத்தின் பழைய மாணவனும் சட்டத்தரணியுமான கே.சுகாஷ் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், தமிழ் மக்களின் தனித்துவங்களைப் பிரதிபலிக்கின்ற அடையாளமாக விளங்குகின்ற யாழ் பல்கலைக்கழகத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் தனித்துவத்தை இழக்கும் நிலை உருவாக்கி வருவதை அவதானிக்க கூடியதாக இருக்கின்றது.
இதற்கு காரணம் பல்கலைக் கழகத்தின் தற்போதைய நிர்வாகத் திறன் இன்மையும் நிர்வாகத்தில் இருக்கின்ற சிலரின் தனிப்பட்ட முன்னேற்றம் தொடர்பான கரிசனைகளுமே. இந்நிலை இப்படியே தொடர அனுமதிப்போமாயின் யாழ் பல்கலைக்கழகத்தில் எமது அடையாளங்ளை இழக்க நேரிடும்.
ஆகவே, யாழ். பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தினை சரியான வழித் தடத்தில் பயணிக்கச் செய்யும் வகையிலான அழுத்தங்களையும் ஆலோசனைகளையும் வழங்கும் வகையில் பழைய மாணவர் கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.








