Breaking News

குமாரபுரம் படுகொலை தீர்ப்பில் அதிருப்தி : ஜனாதிபதிக்கு மகஜர் கையளிப்பு



திருகோணமலை – மூதூருக்கு இன்று விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் குமாரபுரம் மக்கள் மகஜர் ஒன்றை கையளிக்வுள்ளனர்.

மூதூர் பிரதேசத்திலுள்ள மாவட்ட நீதிமன்ற கட்டடத்தினைதிறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இன்று பிற்பகல் பங்கேற்கவுள்ள நிலையில் குமாரபுரம் மக்கள் மகஜரை கையளிக்கவுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த 1996ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி திருகோணமலை குமாரபுரம் – கிளிவெட்டி பிரதேசத்தில் ஸ்ரீலங்கா இராணுவத்தினர் நடத்திய தாக்குதலில், கிராமத்தைச் சேர்ந்த 26 பேர் உயிரிழந்ததோடு, 38 பேர் காயமடைந்தனர்.

இதன்போது பாடசாலை மாணவி ஒருவரும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பிலான விசாரணை மூதூர் நீதவான் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில், எட்டு இராணுவத்தினர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். இவர்களில் இரு இராணுவத்தினர் உயிரிழந்துள்ளனர்.

எனினும் கடந்த 26ஆம் திகதி போதிய சாட்சியங்கள் இல்லாத நிலையில் குறித்த இராணுவத்தினரை அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் குற்றவாளிகள் அல்லவென தீர்ப்பளித்து விடுதலை செய்திருந்தது.

ஒரு கிராமம் முழுவதும் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் அழிக்கப்பட்டமை தொடர்பாக சாட்சியங்கள் இருந்த நிலையில் தமக்கு நீதி கிடைக்கவில்லை எனவும், இதனால் ஸ்ரீலங்கா நீதித்துறையில் நம்பிக்கையில் என தெரிவித்துமே, குமாரபுரம் மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளனர்.

இதேவேளை, சம்பூர் பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் ஸ்ரீலங்கா அரசாங்கத்தினால் அமைக்கத் திட்டமிட்டுள்ள அனல்மின் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சம்பூர் பிரேச மக்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.