Breaking News

மஹிந்தவின் உறுப்புரிமைக்கு ஆப்பு - சந்திரிகா அதிரடி



முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையை பறிப்பதற்கு கட்சியின் உயர்மட்டம் தீர்மானி த்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதியும், ஸ்ரீலங்கா கட்சியின் போஷகர்களில் ஒருவருமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரனதுங்க தலைமையில் நேற்றைய தினம் தென்பகுதி கரையோர பிரதேசமான அஹுங்கல்லயில் நடைபெற்ற அந்தக் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்துகொண்ட கூட்டமொன்றிலேயே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதுகுறித்து கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்கவிடம் கேட்டபோது, நேற்றைய சந்திப்பை உறுதிப்படுத்திய அவர், எனினும் மஹிந்த குறித்தோ அவரது ஆதரவாளர்கள் தொடர்பிலோ எந்தவித தீர்மானங்களையும் எடுக்கவில்லை என கூறி இன்று வெளியான தகவல்களை நிராகரித்தார்.

அஹுங்கல்ல பிரதேசத்திலுள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் நேற்று புதன்கிழமை சுமார் 5 மணிநேரம் வரை தொடர்ந்ததாக தெரிவிக்கப்படும் இந்த இரகசிய சந்திப்பு, விருந்துபசாரம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஊடகப் பேச்சாளரும், இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரேரா ஐ.பி.சி தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தார்.

சந்திரிகா தலைமையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர, வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே, நாடாளுமன்ற உறுப்பினர்களான நந்திமித்ர ஏக்கநாயக்க, அத்தாவுத செனவிரட்ண, தென்மாகாண முதலமைச்சர் சான் விஜேலால் சில்வா உள்ளிட்ட பலர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது மஹிந்த ராஜபக்சவின் உறுப்புரிமையை பறிப்பது மாத்திரமன்றி, அவர் சார்பாக குரல் கொடுத்துவரும் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்களான குமார வெல்கம, தினேஷ் குணவர்தன, டலஸ் அழகப்பெரும, மஹிந்தானந்த அலுத்கமகே, ரோஹித்த அபேகுணவர்தன, பிரசன்ன ரணதுங்க ஆகியோருக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொண்டு உறுப்புரிமையை பறிப்பதற்கும் நேற்றைய கூட்டத்தின்போது தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் சிங்கள ஊடகங்கள் இன்று தகவல்கள் வெளியிட்டுள்ளன.

இந்தத் தீர்மானங்களை எதிர்வரும் 28ஆம் திகதிக்கு முன்னதாக மேற்கொள்வதற்கு கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்கவிற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரனதுங்க ஆலோசனை வழங்கியிருப்பதாகவும் அந்த செய்திகளில் கூறப்படுகின்றது.