காணாமல் போனோர் அலுவலகம் : திருத்தங்களை முன்வைக்கும் கூட்டமைப்பு
இலங்கை அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்து அறிவதற்காக அலுவலம் தொடர்பில் சில திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாக பிரதான எதிர்க்கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அலுவலகத்தை ஸ்தாபித்தல் தொடர்பில் நாடாளுமன்றில் விவாதங்கள் நடைபெறும் போது, இந்த திருத்தங்களை முன்வைக்கவுள்ளதாகவும் கூட்டமைப்புத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இது குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு வழங்கிய வாக்குறுதிக்கேற்ப, அரசாங்கம் இந்தச் சட்டமூலத்தை வரைவு செய்து, நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளது. இது சட்டமாக்கப்படுமானால், போரின் போது காணாமல் போனவர்கள் குறித்த அலுவலகம் அமைக்கப்படும். இதற்கு அரசாங்கம் சில திருத்தங்களை கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.
இதற்கு முன்னர் சட்டத்தில் இருந்ததையும் விட சிறிது கூடுதலான திருத்தங்களை முன்மொழிவதற்கு எதிர்பார்த்துள்ளோம். இந்த திருத்தங்களுடன் இந்தச் சட்டம் அமுல்படுத்தப்பட்டால், வலுக்கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கிடைக்கும்’ என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.








