Breaking News

சகல இன மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும்!



தமது சமூகத்தின் நலனுக்காக மட்டுமன்றி அனைத்து இன மக்களினதும் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டுமென்பதே, நோன்புப் பெருநாளின் அடிப்படை செய்தியாக அமைந்துள்ளதெனவும் அதன் அடிப்படையில் அனைவரும் செயற்பட வேண்டுமெனவும் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று கொண்டாடப்படும் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, எதிர்க்கட்சித் தலைவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே இவ்விடயத்தை தெரிவித்துள்ளார். குறித்த செய்தியில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

”ஆன்மீக வாழ்க்கையின் முக்கியத்துவமும் ஏழைகளுக்கு உதவுவதன் முக்கியத்துவம் பற்றியும் இவ்விழா நினைவூட்டுகின்றது. முஸ்லிம்கள் நோன்பு நோற்கும் காலப்பகுதியினுள், உதவிகள் தேவைப்படுவோரை அணுகி அவர்களது தேவைகளை பூர்த்திசெய்து, தம்மிடம் காணப்படுகின்ற ஒத்துழைக்கும் மனப்பான்மையினை எடுத்துக் காட்டுகின்றனர்.

நாம் தற்போது மிகவும் முக்கியமான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறோம். ஆகவே நோன்பின் அடிப்படை செய்தியான அனைத்து இன மக்களுக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்ற வேண்டும் என்ற கருத்தினை ஏற்று செயற்படுவதற்கு திடசங்கற்பம் பூணுமாறு, இலங்கைவாழ் அனைத்து சமூகத்தினரிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இத்தினத்தின் முக்கியத்துவமானது வெறுமனே முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி, அனைத்து இன மக்களையும் ஒன்று சேர்க்கக்கூடியதாக அமைந்துள்ளது என்பதனை நினைவில் வைத்துக்கொள்ளல் வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.